×

முத்துப்பேட்ைடயில் புதிதாக அமைத்து 6 ஆண்டுகளில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமான சிமெண்ட் சாலை

முத்துப்பேட்டை, ஜூன் 14: முத்துப்பேட்டையில் புதிதாக அமைத்து 6 ஆண்டுகளில் முற்றிலும் சேதமான சிமெண்ட் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட 13, 14வது வார்டின் பகுதியை இணைக்கும் பேட்டை சாலையிலிருந்து குட்டியார் பள்ளி முதல் துவங்கும் சிமெண்ட் சாலை ஜமாலியா தெரு, கோவிலான் தோப்பு, காமராஜர் காலனி, பந்தல் அடி திடல், ஊமை கொல்லையை கடந்து செம்படவன்காடு பெருமாள் கோவில் அருகே முடிகிறது. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் பள்ளி கூடங்கள், பல்வேறு தரப்பினரின் வழிப்பாட்டு தலங்களும் உள்ளன.சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சிமெண்ட் சாலை சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் இருந்த தார்சாலைக்கு பதிலாக போடப்பட்ட சிமெண்ட் சாலையாகும். சாலை பணி நடைபெறும் போதே முறையான பணிகளை ஒப்பந்ததாரர்கள் செய்யாததால் அடுத்த சில நாட்களிலேயே சாலை சேதமாகி பல்லிளிக்க ஆரம்பித்துவிட்டது.

அடுத்தடுத்த மாதங்களில் பெய்த மழைக்கு ஜல்லிகள் பெயர்ந்து குண்டும்குழியுமாக மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சாலை பணியில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த சாலை மக்கள் பயன் படுத்தவும் வாகனங்கள் செல்லவும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பல்லாங்குழி போன்று தற்பொழுது உள்ளது. பல பகுதியில் சாலையே காணவில்லை. அதேபோல் இப்பகுதியில் குளங்களை கடக்கும் சாலையில் தடுப்பு சுவர்கள் சாய்ந்து சாலை ஆபத்தான நிலையில் சேதமாகி உடைந்து அந்தரத்தில் விழுவது போன்று காட்சி அளிக்கிறது.இதனால் இப்பகுதி மக்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதேபோல் கனரக வாகனங்கள் செல்வதும் தடைப்பட்டு விட்டது. ஆனாலும் பள்ளி வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் தள்ளாடி கொண்டுதான் செல்கின்றன. இதன் மூலம் சிறுசிறு விபத்துக்கள் முதல் பெரியளவிலான விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.இந்த சாலையை சீரமைத்து சரி செய்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் விரக்தியடைந்த இப்பகுதி மக்கள் இனியும் அதிகாரிகள் சீரமைக்க காலதாமதம் செய்தால் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தம்பிசுரேஷ் கூறுகையில், சாலை பணி நடக்கும்போதே போதிய தரம் இல்லாமல் போட்டு மிகப்பெரிய மோசடி நடந்து விட்டது. அதனால் இன்று வரை இந்நிலைக்கு மாறி சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு போய்விட்டது.அதுமட்டுமல்லாமல் சேதமாகியுள்ள இந்த சாலையால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளது. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் இவ்வழியாக வர முடியவில்லை.இதில் இப்பகுதியில் உள்ள குளத்தை ஒட்டி செல்லும் சாலை பகுதி பாதியளவில் பெயர்ந்து விட்டதால் அந்த இடத்தில் வாகனங்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் தான் சென்று வருகின்றன. இதனால் தினந்தோறும் இப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.மக்கள் நலன்கருதி இந்த சாலையை உடன் சீரமைத்து தர வேண்டும். இல்லையேல் இந்த சாலையை அகற்றினால் கூட பரவயில்லை இனியும் அதிகாரிகள் காலம் தாழ்த்தினால் விரைவில் பெரியளவிலான போராட்டங்களை நடத்துவோம் என்றார்.




Tags : Cement road ,
× RELATED ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு...