×

பொதுமக்கள் மகிழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னை மரங்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

புதுக்கோட்டை, ஜூன் 14: இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள விவசாயிகள் தென்னை மரங்களை காப்பீடு செய்து பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் 10,168 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வீசிய கஜா புயலால் தென்னை மரங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்து கொள்ள தென்னை மரங்களை காப்பீடு செய்து பயன்பெறலாம்.

மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்படும் பட்சத்தில் இழப்பீடு வழங்கப்படுகிறது. நன்கு பராமரிக்கப்பட்டு காய்கள் வளமாக உள்ள தென்னை மரங்கள் தொடர்ச்சியாக இருந்தால் மட்டுமே மரங்களின் வயதுக்கேற்ப பிரிமீயம் செலுத்தி காப்பீடு செய்ய இயலும். அவ்வாறு தொடர்ச்சியாக உள்ள மரங்கள் 5 எண்களுக்கு குறையாமலும், ஒரு ஹெக்டேருக்கு 175 எண்கள் வரையும் காப்பீடு செய்யலாம். ஒரு விவசாயி எவ்வளவு மரங்கள் வேண்டுமானாலும் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் தாங்கள் காப்பீடு செய்ய உள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, நன்கு பராமரிக்கப்பட்டு செழிப்பாக உள்ளது என்பது குறித்த விவரங்களை சுய முன்மொழிவாக அளிக்க வேண்டும். தென்னை காப்பீட்டுத் திட்டத்தில் மரம் ஒன்றுக்கான ஆண்டு பிரிமியத் தொகை 4 முதல் 15 வரை வயதுள்ள மரங்களுக்கு ரூ. 9, 6 முதல் 60 வரை வயதுள்ள மரங்களுக்கு ரூ. 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப் பிரிமியத்தில் மானிய தொகையாக மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவிகிதம் மற்றும் மாநில அரசு 25 சதவிகிதம் ஏற்றுக் கொள்கிறது. மீதமுள்ள 25 சதவிகித பிரிமியத் தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. இதன் அடிப்படையில் விவசாயிகள் செலுத்த வேண்டிய 25 சதவிகிதமான பிரிமியத் தொகை 4 முதல் 15 வரை வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.2.25, 16 முதல் 60 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50 செலுத்த வேண்டும். தென்னை காப்பீடு பாலிசி செலுத்தப்பட்ட பிரிமியத்தின் அடிப்படையில் ஓராண்டுக்கு வழங்கப்படுகிறது.

சிட்டா, அடங்கல், நில வரைபடம், முன்மொழிவு படிவம் ஆகிய ஆவணங்களை அளித்தால் போதும். காப்பீடு செய்ய உள்ள தென்னை மரங்களுக்கான பிரிமியத் தொகையை வங்கி வரைவோலை அல்லது காசோலையாக எடுத்து உரிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மூலமாக சென்னையில் உள்ள காப்பீடு நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றை அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : district ,Pudukottai ,
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...