×

கடலில் சூறைக்காற்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது

குளச்சல், ஜூன் 14: குளச்சல் கடலில் காற்று காரணமாக ஒரு சில  கட்டுமர  மீனவர்களே  மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதனால் மீன் வரத்து குறைந்தது. குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000க்கும் மேற்பட்ட பைபர் கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. கடந்த 1ம் தேதி முதல் 60 நாட்கள்  குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் படகுகள் கடந்த 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக குளச்சல் பகுதியில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடலில் காற்றும் பலமாக வீசுகிறது. சில வேளைகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கட்டுமரங்கள்  கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று கடல் சீற்றம் சற்று தணிந்ததையடுத்து ஒரு சில கட்டுமரங்கள் கடலுக்கு சென்றன. ஆனால் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. சாளை, நெத்திலி போன்ற மீன்களே கிடைத்தன. அதுவும் குறைவாக கிடைத்ததால் விலை அதிகமானது. 2, 3 ரூபாய்க்கு விற்பனையான சாளை மீன் ஒன்று ₹10க்கு விலை போனது. இதனால் மீன் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். படகுகளுக்கு 60 நாட்கள் மீன்பிடிக்க தடை, காற்று காரணமாக ஒரு சில கட்டுமரங்களே நேற்று  கடலுக்கு சென்றதால் குளச்சலில் மீன் வரத்து வெகுவாக குறைந்தது.

Tags : sea ,
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்