×

மருத்துவமனையில் மாயமானவர் சாலையோரம் சடலமாக மீட்பு

தர்மபுரி, ஜூன் 14: தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருந்து, மாயமானவர் சாலையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து, வாட்ஸ் அப் மூலம் தகவலறிந்து குடும்பத்தினர் கதறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பன்னிஅள்ளிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி(55). இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2  மகன்கள் உள்ளனர். சற்று மனநிலை பாதிக்கப்பட்ட சின்னசாமி,  கடந்த 6ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பன்னிஅள்ளிபுதூர் அருகே சாலையோரத்தில் அடிபட்ட நிலையில் சின்னசாமி மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னசாமி, கடந்த 9ம் தேதி இரவு திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும், அவரை காணவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம், சின்னசாமியின் குடும்பத்தினருக்கு, வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில், அடையாளம் தெரியாத நபர் இறந்து விட்டதாக கூறி, சின்னசாமியின் புகைப்படமும், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று, சின்னசாமியின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே சின்னசாமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில், சின்னசாமி வாகனம் மோதி உயிரிழந்தாரா? என பாலக்கோடு போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : hospital ,
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...