கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

கோவில்பட்டி, ஜூன் 14:  குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி கோவில்பட்டி  தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. அமுதா தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்  கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அமுதா தலைமையில் ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். அதாவது இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது  குழந்தைகளின் அடிப்படை உரிமை என்றும், 14 வயதுக்கு உள்ளிட்ட குழந்தைகளை  ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன். அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில்  விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.  தமிழகத்தை குழந்தை தொழிலாளர் முறை அற்ற  மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் தாசில்தார்  பரமசிவன், தலைமையிடத்து துணை தாசில்தார் ராமகிருஷ்ணன், மண்டல துணை  தாசில்தார் சுரேஷ், தேர்தல் துணை தாசில்தார் சரவணபெருமாள், வருவாய்  ஆய்வாளர் தினகரன் மற்றும் தாலுகா அலுவலக ஊழியர்கள் திரளாகப் பங்கேற்று  உறுதிமொழி ஏற்றனர்.

எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே து.அருணாசலபுரத்தில் மேல ஈரால் வி.ஏ.எம் ரத்தினம் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி, அருணாசலபுரம் இந்து நாடார் துவக்கப் பள்ளி, கண்மணி தர்ம பண்டு சார்பில் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கண்மணி தர்மபண்டு நிறுவனர் சந்திரமோகன் தலைமை வகித்தார். முன்னாள் தர்மகர்த்தா காசி, தர்மகர்த்தா தங்கவேல் முன்னிலை வகித்தனர். வி.ஏ.எம் ரத்தினம் இந்து நாடார் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஆத்தியப்பன் வரவேற்றார். எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், பேரணியைத் துவக்கிவைத்தார். இதில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர், விழிப்புணர்வு கோஷம் எழுப்பியபடி சென்றனர்.எட்டயபுரம் எஸ்ஐ சேகர், மேல ஈரால் சீனிராஜ், ஆசிரியைகள் வரதலட்சுமி, ஜெயசெல்வி, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி ஆசிரியர் அசோக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : area ,Ettayapuram ,
× RELATED குடியிருப்பு பகுதியில் சிக்கிய மலைப்பாம்பு