×

மந்தியூர் சாலை சீரமைப்பு பணி தொடக்கம்

கடையம், ஜூன் 14:  கடையம் அருகே 11 ஆண்டுகளாக பராமரிப்பின்றி போக்குவரத்துக்கு லாயக்கற்று காட்சியளித்த மந்தியூர் சாலை சீரமைப்பு பணி, தினகரன் செய்தி எதிரொலியாக தொடங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.  கடையம் யூனியனுக்குட்பட்டது மந்தியூர். இங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் இருந்து மகாராஜபுரம் காலனி வரை சுமார் 1 கிமீ தொலைவிலான சாலை பராமரிப்பின்றி உருக்குலைந்து கிடந்தது. இந்த சாலையை ராஜாங்கபுரம், மந்தியூர், மகாராஜபுரம், கோவிந்தபேரி, நீலமேகபுரம், சம்பன்குளம், பிள்ளைகுளம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த சாலையில் கடந்த 11 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறாததால், ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சியளித்தன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். போக்குவரத்துக்கு லாயக்கற்ற இச்சாலை வழியாக கடையத்தில் உள்ள டியூசன், கணினி சென்டர்கள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  மழை நேரத்தில் பள்ளங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இச்சாலை நிலை குறித்து இப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிராம சபை கூட்டத்ைத புறக்கணித்து கோரிக்கையை வலியுறுத்தியும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதுகுறித்து கடந்த மே 2ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சாலையில் ஜல்லிகற்கள், மண் கொட்டப்பட்டு சாலை பணி தொடங்கியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள்  விரைவில் தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக  சிதிலமடைந்து கிடந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Mandiant ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி