ஆரணி அடுத்த நடுப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க முதல் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

ஆரணி, ஜூன் 14: ஆரணி அடுத்த நடுப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக பிரிப்பதற்கு முன்மொழிவு சம்மந்தமாக இரண்டு ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் முதல் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
மேற்கு ஆரணி ஒன்றியம், விண்ணமங்கலம் ஊராட்சி, நடுக்குப்பம் கிராமத்தில் 220க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதேபோல், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம், கோணையூர் ஊராட்சியில் நடுக்குப்பம் 4வது வார்டு அடங்கி உள்ளது. இதனால் நடுக்குப்பம் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்திடம் முறையிட வேண்டியுள்ளதாம்.
எனவே, நடுப்பட்டு கிராமம் இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும், 2 ஊராட்சிகளிலும் வருவதால், கிராமத்தை ஒன்றிணைத்து தனி ஊராட்சியாக அறிவிக்குமாறு, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், நடுப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்குமாறு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் கடந்த ஆண்டு பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். இதன் அடிப்படையில், விண்ணமங்கலம் ஊராட்சி, கோணையூர் ஊராட்சியில் வசிக்கும் மக்களுடன் முதல் கருத்து கேட்பு கூட்டம் நேற்று முன்தினம் நடுப்பட்டு கிராமத்தில் உள்ள கோயிலில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. அப்போது நடுப்பட்டு கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 2 ஊராட்சிகள் வருவதால், அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைப்பதில்லை. கர்ப்பிணிகள் மருத்துவ பரிசோதனைக்காக விண்ணமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு சென்றால், கோணையூர் ஊராட்சிக்கு தான் போக வேண்டும் எனக்கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் கர்ப்பணிகள் ஆரணி, பெரணமல்லூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும், கிராமத்தில் அங்கன்வாடி மையம், மருத்துவமனைகள் இல்லை. இதுதவிர, உள்ளாட்சி தேர்தலின்போதும் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு விடுவதால் எங்கள் பகுதியை சேர்ந்த உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அடுத்த தலைமுறையினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எனவே, எங்களது ஒரே கோரிக்கையான நடுப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில், `மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் நடுப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அமைக்க மாவட்ட நிர்வாகம் முழு ஒப்புதல் வழங்குகிறது. அதேபோல், தனி ஊராட்சியாக பிரிப்பது தொடர்பாக மூன்று முறை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். முதல் கூட்டம் இப்போது நடக்கிகது. அடுத்த கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என்றார். இதில் மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயசுதா, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் அரவிந்த், சாமிநாதன், பிடிஓக்கள் சவிதா, கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் தியாகராஜன் மற்றும் அனைத்துறை அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : village ,
× RELATED ஐதராபாத் என்கவுன்டரை விசாரிக்க...