×

மழைக்காலம் தொடங்கும் முன்பு நீரின்றி வறண்ட எடப்பாளையம் ஏரி தூர்வாரி சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, ஜூன் 14: திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் ஏரி, தண்ணீரில்லாமல் வறண்டுவிட்டது. எனவே, மழைக்காலம் தொடங்கும் முன்பு ஏரியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இதுவரை எப்போதும் இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஏரி, குளம், கிணறுகள் முற்றிலுமாக வற்றிவிட்டன. நிலத்தடி நீரும் சரிந்துவிட்டது. இதனால், குடிநீருக்காக மக்கள் தவிக்கின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் உள்ள எடப்பாளையம் ஏரியில் ஒரு சொட்டு தண்ணீரின்றி வரண்டுவிட்டது. கடும் கோடை வெயிலினால் பாளம் பாளமாக வெடித்து காணப்படும் நீர்பிடிப்பு பகுதியை காணும் விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். எடப்பாளையம் ஏரியின் பெரும்பகுதி ஏற்கனவே ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சீரழிந்துவிட்டது. ஏரிக்கான நீர் வரத்து கால்வாய் இருக்கும் இடம் தெரியாதபடி மண்மூடி மறைக்கப்பட்டுள்ளன. நகரின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீருக்கான வடிகால் பகுதியாகவே நீண்டகாலமாக இந்த ஏரி பயன்படுகிறது. மேலும், கழிவு நீர் ஏரிக்குள் விடப்படுவதால், பல ஆண்டுகளாக கழிவுநீருடன் கலந்து வந்த பிளாஸ்டிக் கழிவுகள் ஏரியின் பெரும்பகுதி சூழ்ந்துள்ளது. நிலத்தடி நீரை உறுஞ்சும் தன்மைகொண்ட சீமை கருவேல மரங்கள் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் நிறைந்திருக்கிறது.

இத்தனை சீரழிவுகளுக்கும் பிறகும், எடப்பாளையம் ஏரியில் நீர் நிரம்பினால் மட்டுமே அதன் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் நிலை உள்ளது. ஆனால், தற்போது ஏரி வற்றியதால், எடப்பாளையம், சாரோன் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றியிருக்கிறது. போர்வெல்கள் செயலிழக்க தொடங்கிவிட்டன. எனவே, நீர் வற்றியுள்ள எடப்பாளையம் ஏரியை தூர்வாரி, மழைக்காலம் தொடங்கும் முன்பு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், காணாமல் போன நீர்வரத்து கால்வாய்களை கண்டுபிடித்து, மழை நீர் ஏரிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆலோசனையும் நடத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பொதுமக்களை ஒன்றுதிரட்டி ஏரியை சீரமைக்கும் பணியை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளனர். எனவே, பொதுமக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏரியை சீரமைக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : uppalayam lake ,season ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு