மாடு முட்டித்தள்ளியதில் கிணற்றில் தவறி விழுந்த மாமியார், மருமகள் படுகாயம்

திருப்பத்தூர், ஜூன் 14: திருப்பத்தூர் அருகே மாடு முட்டித்தள்ளியதில் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மாமியர், மருமகள் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சின்னகந்திலி கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா(30). இவர் நேற்று மாலை தனது மாடுகளை நிலத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது, மாடு ஒன்று திடீரென மிரண்டதில் நிர்மலாவை திடீரென முட்டித்தள்ளியது. இதில் நிலைதடுமாறிய அவர் அருகில் இருந்த 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். இதைப்பார்த்த நிர்மலாவின் மாமியார் முனியம்மாள்(55), மிரண்டு ஓடிய மாட்டை தடுக்க முயன்றார். அப்போது, முனியம்மாவையும் மாடு முட்டித்தள்ளியது. இதில் அவரும் கிணற்றில் விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இல்லாதால் மாமியார், மருமகள் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர், திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை அலுவலர் எத்திராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி 2 பேரையும் உயிருடன் மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கந்திலி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.'

Tags : mother-in-law ,daughter-in-law ,
× RELATED மாமியாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு