×

வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்டிஓ அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு

ராணிப்பேட்டை, ஜூன் 14: வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்டிஒ அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாலாஜா தாலுகா தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்ட தலைவர் ரமேஷ், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் தரன் தலைமை தாங்கினர். மாநில நிர்வாகிகள் பெருமாள், துளசி, கோட்ட செயலாளர் ராமமூர்த்தி, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, வறட்சியால் பயிர் பாதித்த கரும்பு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கி, விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு, ஆற்று மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.இதில் வேலூர், ஆற்காடு, வாலாஜா திமிரி, லாலாப்பேட்டை, அம்மூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க சென்றனர்.  அப்போது ஆர்டிஓ இளம்பகவத், அரக்கோணத்தில் நடைபெறும் ஜமாபந்திசிக்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு விவசாயிகள், ஆர்டிஓ நேரில் வந்து மனுவை பெற்றால்தான் நாங்கள் செல்வோம் எனக்கூறி அங்கிருந்த படிக்கட்டுகளில் வரிசையாக அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், இங்கே உட்கார வேண்டாம். மீறினால் கைது செய்வோம் என எச்சரித்தனர். இதனால், போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்த ஆர்டிஓ இளம்பகவத் உத்தரவுப்படி வாலாஜா தாசில்தார் பூமா, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பிறகு அங்கிருந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : RTO ,drought district ,Vellore ,
× RELATED நன்னடத்ைத உறுதிமொழி பத்திரம் அளித்த 262...