ராமாபுரத்தில் பரபரப்பு மின்சாதன கம்பெனியில் தீ

பூந்தமல்லி: ராமாபுரத்தில் மின்சாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது. போரூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர், அதே பகுதியில் மல்டி மீட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஊழியர்கள் கம்பெனியை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் கம்பெனியில் இருந்து திடீரென கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பூந்தமல்லி, கிண்டி, விருகம்பாக்கம் மற்றும் அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி, கம்பெனிக்குள் பரவிய தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கம்பெனியில் இருந்த மின்சாதனங்களை பரிசோதிக்கும் விலை உயர்ந்த இயந்திரங்கள், மூலப்பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : power company ,Ramapuram ,
× RELATED ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: ஒரு குழந்தை உயிரிழப்பு