×

வாலாஜாபாத் அருகே புறவழி சாலையில் குறுகிய வளைவுகளால் அடிக்கடி விபத்து

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த புறவழிச் சாலை முத்தியால்பேட்டையில் இருந்து ராஜகுளம் வரை சென்று, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது.  இந்த புறவழி  சாலையை ஒட்டி களியனூர், வையாவூர், கரூர், செல்லியம்மன்பேட்டை உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதற்கிடையில் செங்கல்பட்டு, ஒரகடம், உத்திரமேரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் சென்று வந்தது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இந்த புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் குறுகிய வளைவுகள் உள்ளன. இதனால் லாரி, கார், பஸ் உள்பட பல்வேறு வாகனங்கள் குறுகிய வளைவில் செல்லும்போது, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பலர் படுகாயமடைந்துள்ளனர். சில உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.

இதனால், இந்த சாலையில் ஆங்காங்கே உள்ள குறுகிய வளைவுகள் உள்ள பகுதியில், சாலையை அகலப்படுத்தினால் விபத்துக்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த புறவழிச் சாலையில் வளைவுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதேபோல், வளைவுகள் உள்ள பகுதிகளில் சாலையில் இருபுறமும் புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், விபத்துகள் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், களியனூர் கிராமம் அருகே குறுகிய வளைவு உள்ளது. இந்த பகுதியில் தடுப்புகள் வைத்தும் எவ்வித பயனும் இல்லாததால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே, களியனூர் பகுதியில் உள்ள குறுகிய வளைவு பகுதியை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், உடனடியாக விரிவுப்படுத்தினால் விபத்துக்கள் குறையும் என்றனர்.

Tags : road ,Walajabad ,
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...