×

கிணற்றில் தூர்வார இறங்கியபோது விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் மயக்கம்

செங்கல்பட்டு ஜூன் 14: விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள், கிணற்றில் தூர்வார இறங்கியபோது மயங்கி விழுந்தனர். இச்சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். வல்லம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர். இவரது வீட்டில் அமைந்துள்ள 40 அடி கிணற்றில் தண்ணீர் வற்றி இருந்தது. இதனால், கிணற்றை தூர்வாரி சீரமைக்க ஆனந்தன் முடிவு செய்தார். இதையடுத்து, செங்கல்பட்டு ராமபாளையத்தை சேர்ந்த முனுசாமி (29), கார்த்திக் (30) ஆகியோரிடம் கிணற்றை தூர்வாரி சீரமைக்க அழைத்தார். அதன்பேரில் நேற்று காலை 2 பேரும், ஆனந்தன் வீட்டுக்கு சென்றனர்.

2 பேரும், கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் தூர் வார இறங்கியபோது, திடீரென 2 பேரும், விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். நீண்ட நேரமாகியும் அவர்கள், மேலே வராததால் ஆனந்தனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கயிறு மூலம் கிணற்றில் இறங்கினர். அங்கு மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிருடன் இருந்தனர்.உடனடியாக அவர்களை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், கிணற்றில் மயங்கி கிடந்த 2 பேரையும், தனது தோளில் சுமந்து கயிறு மூலம் மீட்டு வந்த மீட்பு படை வீரர் யுவராஜ் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய வீரரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags : gas attack ,well ,
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...