×

திருவள்ளூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் கடைகளை திறக்க ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறப்பது தொடர்பான அரசாணையை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முனைவர் ஆ.வளர்மதி பேசுகையில், ‘‘மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கும்போது, அதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சுழற்சி அடைப்படையில் வாரத்தில் ஒருநாள் விடுப்பு வழங்க வேண்டும்.

8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகை ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். விடுப்பு எடுக்கும் பணியாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண் பணியாளர்களை இரவு 8 மணிக்கு மேல் வேலை வாங்கக்கூடாது. அவ்வாறு பணிபுரியும் கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பெண் பணியாளரிடம் எழுத்துபூர்வமாக ஒப்புதல் பெற்று, அவர்களுக்கு தங்குமிடம், கழிவறை வசதி, இடவசதி மற்றும் பாதுகாப்பு வசதி செய்ய வேண்டும்.பெண்கள் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாத்திட பாலியல் துன்புறுத்தல் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர் துறையினரால் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் திடீரென  மேற்கொள்ளும்போது, தவறுகள் இருந்தால் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்படும்’’ என்றார். கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசுகையில், ‘‘கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறப்பது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களும், தொழிலாளர் துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்’’ என்றார். இதில் டிஎஸ்பி கங்காதரன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, நகராட்சி ஆணையர்கள் உள்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : shops ,district ,Thiruvallur ,
× RELATED மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 100...