×

ஆவடி சின்னம்மன் கோயில் தெருவில் சிதிலமடைந்து கிடக்கும் சாலை

ஆவடி: ஆவடி சின்னம்மன் கோயில் தெருவில் சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தினமும் அவதிப்படுகின்றனர். பலமுறை புகார் அளித்தும் நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆவடியில் இருந்து சின்னம்மன் கோயில் தெரு, அண்ணனூர், அயப்பாக்கம், எம்ஜிஆர் புரம் வழியாக செல்லும் சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆவடி, அம்பத்தூர் பகுதிகளுக்கு சிடிஎச் சாலை வழியாக வாகனங்கள்  சென்றால் போக்குவரத்து நெரிசல், காலதாமதம் ஆகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் அயப்பாக்கம் வழியாக ஆவடி-அம்பத்தூர் சாலை பயன்படுத்தி சென்று வருகின்றனர். இச்சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஆவடி, சின்னம்மன் கோயில் தெருவில் பொறியியல், கலை கல்லூரிகள், பள்ளிக்கூடம், வங்கி மற்றும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக கிடக்கிறது. சிறு மழை பெய்தாலும்கூட சாலையில் உள்ள பள்ளங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் அவதிப்பட்டு சென்று வருகின்றன. மேலும் இந்த சாலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் சிரமப்படுகின்றனர். மேலும், இரவில் வேலை முடிந்து இருசக்கர வாகனங்களில் வீட்டுக்கு திரும்பும் தொழிலாளர்கள் குண்டும் குழியுமான சாலையில் விழுந்து செல்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து குண்டும் குழியுமாக கிடக்கும் சின்னம்மன் கோயில் தெரு சாலையை உடனே சீரமைத்து கொடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Avadi Chinnamman ,road ,street ,
× RELATED புதுக்கோட்டையில் குடிநீர் கேட்டு 2வது நாளாக மறியல்