×

வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் சர்வர் வேலை செய்யாததால் பட்டா வழங்குவதில் சிக்கல் பொதுமக்கள், விவசாயிகள் அவதி

வத்திராயிருப்பு, ஜூன் 13: வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில், சர்வர் வேலை செய்யாததால், பட்டா, சிட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் அவதிப்படுகின்றனர். வத்திராயிருப்பில் கடந்த பிப்.19ம் தேதி புதிய தாலுகா அலுவலகம் திறக்கப்பட்டது. தாலுகா அலுவலகம் தொடங்கிய சில நாட்களிலே மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தாலுகா அலுவலக பணியாளர்கள் தேர்தல் வேலையில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் முடிந்து, நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டதும், தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் சாதி, இருப்பிடச் சான்று வழங்கும் பணி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்திலிருந்து, வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட நிலங்களை பிரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. ஆனால், கடந்த மே 1ம் தேதி முதல் வத்திராயிருப்பு தாலுகாவிற்கான சர்வர் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள், வீட்டுமனை, வீடுகள் உள்ளிட்டவைகளை சர்வே செய்ய முடியாத நிலை உள்ளது.

சர்வே செய்தாலும், புதிய இடத்திற்கான 10(1) பட்டா மாறுதல் அல்லது சிட்டா மாறுதல் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், பட்டா பெயர் மாற்றம் புதிதாக பட்டா பெறுதல், சிட்டா பெயர் மாற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாய நிலங்கள், காலிமனைகள், புதிய வீடுகள் கட்டுவதற்கு வங்கிகளில் கடன் வாங்குவதற்கு பட்டா மற்றும் சிட்டா தேவைப்படுகிறது. தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் சர்வர் வேலை செய்யாததல், அனைத்துப் பணிகளும் தேக்கமடைந்துள்ளன. எனவே, வத்திராயிருப்பு தாலுகாவிற்கான தனி சர்வர் ஏற்படுத்தி, பட்டா, சிட்டா பணிகளை விரைந்து மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Tags : office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்