×

கஜா புயல் பாதிப்பை சீரமைத்த மின்வாரிய ஊழியர்கள் 2 மடங்கு ஊதியம் கிடைக்காமல் ஏமாற்றம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அருப்புக்கோட்டை, ஜூன் 13: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு இருமடங்கு ஊதியம் கிடைக்கமால் ஏமாற்றத்தில் உள்ளனர். எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கஜா புயலால் கடந்தாண்டு கடுமையாக பாதிக்கப்பட்டன. தெருக்களில் மின்கம்பங்கள் சாய்ந்து, டிரான்ஸ்பாம்கள் பெயர்ந்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. மாவட்டங்களில் மின்விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனை சீரமைக்க மற்ற மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்களை அழைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில், பணிக்கு வரும் மின்வாரிய பணியாளர்களுக்கு இரண்டு மடங்கு ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  
இதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து உதவி செயற்பொறியாளர்கள், போர்மேன்கள், லைன்மேன்கள், எல்ஐக்கள், ஹெல்பர்கள் உட்பட 400க்கு மேற்பட்டவர்கள் கஜாபுயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று புதிதாக மின்கம்பங்கள் நடுதல், டிரான்ஸ்பாம்கள் அமைத்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளில் 25 நாட்களாக மேலாக ஈடுபட்டனர். கடுமையான உழைத்த இவர்களுக்கு இதுவரை இருமடங்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்வாரிய நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.  கடுமையாக உழைத்தும் எந்தவித பலனும் இல்லை என விரக்தியில் உள்ளனர். எனவே, கஜா புயலால் பாதிப்பை சீரமைத்த மின்வாரிய ஊழியர்களுக்கு இருமடங்கு ஊதியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government of Tamil Nadu ,storm ,Ghaz ,
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...