×

கர்ப்பகால சத்துப்பொருள் `குவா குவா’விற்கு பிறகு கிடைத்ததால் பெண்கள் அதிர்ச்சி

தேனி, ஜூன் 13: தேனி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்துப்பொருள்கள், மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் பலருக்கு குழந்தை பிறந்த பின் வழங்கப்பட்டதால் சிகிச்சை பெற்ற பெண்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தற்போது 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பணம், நிதியாக வழங்கப்படாமல் சத்துப்பொருட்கள் அடங்கிய பெட்டகமாக வழங்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

ஒவ்வொன்றிலும் வாரந்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பரிசோதனைகள், ஆலோசனைகள் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கர்ப்ப காலத்தில் 3வது மாதத்திற்கு மேல் சத்துப்பொருள் அடங்கிய பரிசு பெட்டகம் வழங்கப்படும். இதில் இரண்டு வகையான புரோட்டீன் பவுடர் டப்பாக்கள், இரண்டு பேரீச்சம்பழம் பாக்கெட்டுகள், நெய் பாட்டில், 3 வகையான சத்து டானிக்குகள், வயிற்றில் உள்ள குடல் பூச்சிகளை அழிக்கும் மாத்திரை, டவல், ஒரு கப் இருக்கும்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது: கர்ப்பிணிகள் 3வது மாதத்தில் இருந்து இந்த சத்துப்பொருட்களை சாப்பிட்டால் ரத்தசோகை ஏற்படாது. குழந்தை நன்றாக வளர்ச்சி பெறும். ஆனால் தேனி மாவட்டத்தில் இந்த சத்துப்பொருட்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை. மாறாக 8 வது அல்லது 9வது மாதம் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் இந்த புரோட்டீடன் பவுடர், பேரீச்சம்பழம், டானிக்குகள் கர்ப்பிணிகளால் சாப்பிட்டு முடிக்க முடியாது. அப்படி சாப்பிடுவதால் எந்த பலனும் இல்லை.

சில கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்த பின்னர் இந்த பொருட்கள் வழங்கப்படுவது தான் உச்சகட்ட வருத்தமான விஷயம். மாவட்ட உயர் அதிகாரிகள் கர்ப்பிணிகளுக்கு தேவையான பொருட்களை அரசிடம் இருந்தோ, சுகாதாரத்துறையிடம் இருந்தோ உரிய காலத்தில் பெற்றுத்தருவதில்லை. இதனால் நல்ல இத்திட்டம் பலருக்கு பயன்படாமல் போய் விடுகிறது.

கர்ப்பிணி உணவிலும் முறைகேடு:
வாரந்தோறும் பரிசோதனைக்கு ஆரம்ப சுகாதார நிலையம்் வரும் கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இதில் 20 பேருக்கு உணவு கொடுத்தால் 100 பேருக்கு கொடுத்ததாக பல இடங்களில் கணக்கு எழுதப்பட்டு நிதி முறைகேடு செய்யப்படுகிறது. இதனால் அரசின் திட்டம் கர்ப்பிணிகளுக்கு சென்று சேருவதில்லை. இவ்வாறு கூறினர்.

இதுகுறித்து தேனி மாவட்ட சுகாதார துணை இயக்குனர் வரதராஜன் கூறியதாவது: தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே இத்திட்டம் தொடங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் தேர்தல் நடைமுறைகள் காரணமாக இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. அதற்குள் சிலருக்கு குழந்தைகள் பிறந்து விட்டது. சிலருக்கு 8 மற்றும் 9வது மாதங்களை நெருங்கி விட்டது. வரும் காலங்களில் எந்த குழப்பமும் இன்றி இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகினறன. இவ்வாறு கூறினார்.

Tags : Women ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ