×

காரைக்குடி பகுதியில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குவியும் புகார்கள்

சிவகங்கை, ஜூன் 13: காரைக்குடி பகுதியில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எஸ்பியிடம் புகார்கள் குவிந்து வருகிறது. கேரளாவை சேர்ந்த தொழிலதிபரிடம், காரைக்குடியை சேர்ந்த சிலர் ரூ.ஆயிரம் கோடி குறைந்த வட்டிக்கு பணம் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு கமிஷன் மற்றும் டாகுமென்ட் செலவிற்காக ரூ.6 கோடி பெற்று மோசடி செய்ததாக வழக்கு. காரைக்குடியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 40 கோடி ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு நிறுவனத்தை மூடி சென்று விட்டதாக பாதிக்கப்பட்ட முகவர்கள், பணம் செலுத்தியவர்கள் புகார்.

காரைக்குடியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4கோடியே 50லட்சம் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக்கோரி முகவர்கள் புகார். காரைக்குடி பகுதியில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நடத்தி பல கோடி பண மோசடி, சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வேலை தருவதாக பணமோசடி, வெளி நாட்டிற்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் மோசடி என எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது.

காரைக்குடி பகுதியில் நிதி நிறுவனம், இன்சூரன்ஸ் நிறுவனம், வெளி நாட்டிற்கு ஆள் அனுப்பும் நிறுவனம், சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிதி நிறுவனங்கள் மாததவணை, காலாண்டு தவணை, ஒர் ஆண்டு தவணைகளில் பணம் செலுத்தினால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறுகின்றனர்.

இதுபோல் இடைப்பட்ட மாதங்களில் போனஸ், அதிக வட்டி எனவும் ஆசைவார்த்தை கூறப்படுகிறது. அனைத்து கிராமங்களிலும் முதல்நிலை முகவர், அவர்களை ஒருங்கிணைக்க ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் என அடுத்தடுத்த நிலைகளில் அலுவலர்கள் நியமிக்கின்றனர். மொத்தமாக பணத்தை வசூல் செய்யாமல் போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகள், எல்ஐசியில் உள்ள திட்டங்களைப்போல் கூறி மக்களை கவர்கின்றனர்.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒட்டுமொத்த பணத்தையும் வாடிக்கையாளர்கள் பறிகொடுக்கின்றனர். இதுபோல் வெளிநாட்டிற்கு ஆள் அனுப்புவதிலும் அதிகப்படியான மோசடி நடக்கிறது. காரைக்குடி பகுதியில் உள்ள இதுபோன்ற நிறுவனங்கள் புதுக்கோட்டை, ராமநாதபுரம் என அருகிலுள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்களிடமும் வசூல் செய்துள்ளனர். தொடர்ந்து பல கோடி ரூபாய் மோசடி புகார் வருவதால் போலீசார் இதுபோன்ற நிறுவனங்களை கண்காணித்து வழக்கு பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

Tags : area ,Karaikudi ,
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!