×

கந்துவட்டி கும்பல் அராஜகம் தற்கொலைக்கு தள்ளப்படும் அப்பாவிகள்

காரைக்குடி, ஜூன் 13: காரைக்குடி பகுதியில் அடாவடியாக கந்துவட்டியில் வசூலில் ஈடுபடும் தாதாக்களால், அப்பாவி மக்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டும் நிலை உருவாகி உள்ளது. போலீசாருக்கு முறையான கவனிப்பு செல்வதால் கண்டுகொள்வது இல்லை என புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. நகரின் வளர்ச்சிக்கேற்ப நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

அதேபோல் கந்துவட்டி, மீட்டர் வட்டி, ரன்வட்டி என பல்வேறு வட்டி வசூல் களைகட்டுகிறது. ரூ.1000 இக்கும்பலிடம் வாங்கினால் ரூ.800 மட்டுமே கையில் கொடுப்பார்கள். இவர்களுக்கு தினசரி ரூ.10 வீதம், 100 நாட்கள் கட்ட வேண்டும். அதேபோல் காலையில் ரூ.1000ம் கொடுத்தால் மாலையில் ரூ.1100 ஆக கொடுக்க வேண்டும். மறுநாள் கொடுக்கவில்லை என்றால் வட்டியை அசலுடன் சேர்த்து அதற்கும் சேர்த்து வட்டி போட்டு வசூல் செய்வார்கள். சிறிய அளவில் தொழில் செய்பவர்கள், டீ கடை நடத்துபவர்கள் மற்றும் சந்தைகளில் காய்கறி விற்பனை செய்பவர்கள் இந்த கந்துவட்டி கும்பலிடம் சிக்கி உள்ளனர்.

இப்பகுதியில் சிறிய அளவிலான தொழில் புரிபவர்கள் அதிக அளவில் உள்ளதால், தமழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு முகாமிட்டு பணத்தை கொடுத்து வருகின்றனர். ஒருசில பகுதிகளில் பெண்கள் கந்துவட்டிக்கு விட்டு வசூல் செய்யும் அவலநிலையும் உள்ளது. பெண் தாதாக்களிடம் பல்வேறு குடும்ப பெண்கள் சிக்கி தவிக்கின்றனர்.

கேட்ட பணத்தையும், வட்டியை தராதவர்கள் ஆள்வைத்து கடத்துவது, அடியாட்கள் கும்பலை கொண்டு மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் பெண்கள் தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர். மதுரை போன்ற நகரில் உள்ளது போன்று கடன் வாங்கி விட்டு தரதாவர்களின் வீட்டுகளில் அடியாட்கள் அமர்ந்து கொண்டு பிரச்சனையில் ஈடுபடுவார்கள்.

அதேபாணியில் இங்கும் தற்போது நடப்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கருணாநிதி நகரை சேர்ந்த சேகர் என்பவர் அதேபகுதியை சேர்ந்தவரிடம் தனது சொத்தை அடமானம் வைத்து ரூ.12 லட்சம் பணம் வாங்கியுள்ளார். இதற்கு ரூ.38 லட்சம் வரை வட்டி கட்டிய நிலையில் மேலும் பணம் கேட்டு வீட்டை எழுதி தரச்சொல்லி கடன் கொடுத்தவர் மிரட்டி உள்ளார்.

அதேபோல் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரிடம் ரூ. 5 லட்சம் பணம் வாங்கி உள்ளார். பணத்தை திருப்பி கொடுத்த பின்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த சேகர் பூச்சிமருந்தை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கமால் மெத்தனமாக இருந்ததால் குற்றவாளி தப்பி ஓடியுள்ளார். இதுபோல் பலசம்பங்கள் நடந்தும் போலீசார் `கவனிக்கப்படுதால்’ கந்துவட்டிக்கு கொடுப்பவர்களை கண்டுகொள்வது இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : gang ,
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...