×

மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி கூடத்திற்கு பூட்டு குழந்தைகள், பெற்றோர்கள் அதிருப்தி

சிவகங்கை, ஜூன் 13: சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில், நிர்வாக சீர் கேட்டால் நீச்சல் பயிற்சி கூடத்திற்கு பூட்டுப் போடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தைகள், பெற்றோர்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகங்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது.

இதில் நீச்சல் பயிற்சி கூடம், கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து மைதானங்கள், உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மைதானங்கள் உள்ளன. விளையாட்டு அரங்கத்துடன் விளையாட்டு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்கள் தங்கியுள்ள மாவட்ட சிறப்பு விளையாட்டு விடுதி உள்ளது.

இங்கு நீச்சல் மற்றும் உள்விளையாட்டரங்கை பயன்படுத்துவர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படும். கால்பந்து மைதானத்தை சுற்றிலும் உள்ள இடத்தில் இப்பகுதியில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் காலை, மாலை நேரங்கில் நடைப்பயிற்சி செய்வர். இந்நிலையில் இவ்வாறு நடைப்பயிற்சி செல்பவர்களிடம் நடைப்பயிற்சி செல்ல மாதக்கட்டணம் ரூ.750 செலுத்த வேண்டும் என விளையாட்டரங்க அலுவலர்கள் தெரிவித்ததால் பிரச்னை எழுந்தது. இதனால் ஏராளமானோர் நடைப்பயிற்சி செல்வதை தவிர்த்து விட்டனர்.

இந்நிலையில், நேற்று நீச்சல் பயிற்சிக்கு வந்த குழந்தைகளின் பெற்றோர் தங்களது வாகனங்களை இளையான்குடி சாலையிலேயே நிறுத்திவிட்டு வர வேண்டும். உள்ளே வரக்கூடாது என விளையாட்டு அலுவலர் தெரிவித்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நீச்சல் பயிற்சிக்கு செல்லும் கூடத்திற்கு வாகனங்கள் செல்ல தனியாக சாலை உள்ளது. அந்த சாலையில் தான் சென்றனர். ஆனால், அவ்வாறு வரக்கூடாது எனக்கூறி அந்த குழந்தைகளை பயிற்சி செய்ய விடாமல் நீச்சல் பயிற்சிக்கூடத்தை பூட்டிவிட்டனர். இதனால், குழந்தைகளும், பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இங்கு பல்வேறு விளையாட்டிற்கு பயிற்சியாளர்கள் இல்லை. பயிற்சியாளர்களே இல்லாததால் போதிய விளையாட்டு உபகரணங்களும்
இல்லை. மேலும் தொடர்ந்து விளையாட்டரங்கத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுந்து வருவதால் இங்கு பயிற்சிக்கு வருவதையே பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். விளையாட்டரங்கம் நிர்வாக சீர்கேட்டால் பெயரளவில் மட்டும் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இது குறித்து உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

விளையாட்டு பயிற்சிக்கு ஒதுக்கப்படும் நிதியில் முறைகேடு நடக்கிறது. போதிய பயிற்சியாளர், உபகரணம் என எதுவும் இல்லை. அதில், கவனம் செலுத்தாமல் இங்கு பயிற்சிக்கு வருபவர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இங்கு வந்தால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மனஉளைச்சல்தான் ஏற்படும்.

இங்குள்ள நிர்வாக சீர்கேட்டிற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்காமல், விளையாட்டரங்கம் சரிவர செயல்படவும், குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் பயிற்சி பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பதில் பெற முயன்ற போது பதில் கூற மறுத்துவிட்டார்.

Tags : Children ,lock-up hall ,parents ,sports arena ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...