×

நான்கு நகராட்சிகளிலும் உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு வரையரை வெளியீடு ராமநாதபுரத்தில் பெண்களுக்கு 17 வார்டுகள்

ராமநாதபுரம், ஜூன் 13:  ராமநாதபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் தற்போது பெண்களுக்கு 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளிலும் பெண்களுக்கு பாதிக்குப்பாதி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வார்டு வரையறைகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் வார்டுகளில் இடம் பெற்ற தெருப்பகுதிகள் மாற்றம் செய்யப்பட்டு சில நாள்களுக்கு முன்பு வாக்குச்சாவடி வாரியாக அவை வெளியிடப்பட்டன.

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி அந்தஸ்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை ஆகியவற்றில் ஆண்கள் போட்டியிடும் வார்டுகள், பெண்கள் போட்டியிடும் வார்டுகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளன. ராமநாதபுரம் நகராட்சியில் தாழ்த்தப்பட்டோர் பொதுப் பிரிவில் 28வது வார்டு, தாழ்த்தப்பட்டோர் பிரிவு பெண்களுக்கு மட்டும் 26வது வார்டு என ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் பெண்களுக்கான பொது வார்டுகளாக 1, 2, 3, 4, 6,11, 14, 17, 19, 22, 23, 25, 27, 29, 32, 33 ஆகிய வார்டுகள் என 17 வார்டுகள்  ஒதுக்கப்பட்டுள்ளன.

இது மொத்த வார்டில் பாதிக்கும் அதிகமாக உள்ளது. ஆண்களுக்கு 5, 7, 8, 9, 10, 12, 13, 15, 16, 18, 20, 21, 24, 30,31 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கு வார்டாக 1வது வார்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மட்டும் 4,5,7, 11, 13, 15,16, 17, 19, 20 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 வார்டுகள் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கீழக்கரை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் தாழ்த்தப்பட்டோர் பொதுப்பிரிவில் 5வது வார்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான பொது வார்டுகளாக 2, 4, , 6, 10, 11, 12, 13, 15, 16, 18 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோர் பொதுப்பிரிவாக 5, 26 வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்காக 9, 28, 30 ஆகிய வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கான பொது வார்டாக 4, 8, 11,16, 18, 19, 20, 21, 22, 25, 27, 29,31, 34, 35 ஆகிய வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 16 வார்டுகள் ஆண் பொதுப் பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ளன. நகராட்சி வார்டு மறுவரையறையானது. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செயல்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : municipalities ,elections ,women ,Ramanathapuram ,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு