×

பரமக்குடி பகுதிகளில் முத்திரையிடாத எடைகற்கள் பயன்பாடு தாராளம் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

பரமக்குடி, ஜூன் 13:  பரமக்குடி பகுதிகளில் முத்திரையிடப்படாத எடைக்கற்கள் மற்றும் தராசு பயன்பாட்டால், எடை குறைந்துள்ள பொருள்களுக்கு அதிக பணம் கொடுத்து வாங்கவேண்டிய நிலைக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பழங்காலங்களில் பொருள்களின் எடையை அளப்பதற்கு பதிலாக உலோக கற்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கற்களையும், உலோகங்ளையும் பயன்படுத்தி வருகின்றனர். சரியான அளவு மாறி வரும் சூழ்நிலையில் அனைத்து பொருள்களும் பாக்கெட் போட்டு விற்கும் கடைகள் வந்து விட்டது. பெரிய ஊர்களில் சூப்பர் மார்க்கெட் வந்து விட்டதால், சரியான அளவில் பாக்கெட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

ஆனால் விலை குறைவாக இருக்கும் என்பதால், நடைபாதை, ரோட்டோர கடைகள், சந்தைகடைகள், சைக்கிள் வியாபாரிகள், தலைச்சுமையாக விற்பனை செய்பவர்களை அதிகமான மக்கள் நாடி வருகின்றனர். ஆனால் இவர்கள் பயன்படுத்தப்படும் தராசு மற்றும் எடைகற்கள் பொரும்பாலும் துருப்பிடித்து ஓட்டைகளுடன் காணப்படுகிறது. இதே நிலைதான் கிராம மற்றும் நகர் பகுதிகளிலும் உள்ளது.

இன்னும் கிராமங்களில் எடைகற்களுக்கு பதிலாக உலோக பொருள்களையே பயன்படுத்தி வருகின்றனர். இவைகளை ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், எப்போதாவது சில கடைகளை ஆய்வு செய்து விட்டு கணக்கு காட்டிகிறார்களை தவிர, முறையாக கண்காணிப்பதில்லை. இதில் அதிகளவு பொதுமக்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சர்வதேச உரிமைகள் மாவட்ட தலைவர் சாமூவேல் கூறுகையில், பரமக்குடி நகர் பகுதிகளில் உள்ள இறைச்சி கடை மற்றும் ரோட்டோர தள்ளுவண்டிகளில் எல்லாம் சரியான கண்காணிப்பின்றி எடை குறைபாடுகள் தாராளமாக நடைபெற்று வருகிறது. கிராமங்களில் சரியான எடைக்கற்கள் வைத்து வியாபாரம் செய்வதில்லை.

ஆண்டு கணக்கில் ஒரே எடைக்கற்களை பயன்படுத்தி வருவதால், கண்டிப்பாக எடை குறைவு ஏற்படும். முறையாக ஆய்வு மேற்கொள்ளாததால், பொதுமக்களின் பணம் அதிகமாகவும் அதே சமயத்தில் எடை குறைவாகவும் பொருள்களை வாங்கி செல்கின்றனர். ஆகையால் அதிகாரிகள் எடைகற்களை மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்றார்.

Tags : areas ,Paramakudi ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்