×

ராமநாதபுரம் ஜிஹெச்சில் கலெக்டர் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும் நோயாளிகள் வலியுறுத்தல்

ராமநாதபுரம், ஜூன் 13: ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தியதால் மருத்துவமனை வளாக அவசர பிரிவு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுவதில்லை என தொடர்ந்து புகார் வந்தது. இந்நிலையில் நேற்று காலை கலெக்டர் வீரராகவ ராவ் திடீர் ஆய்வு நடத்தினார். இதனால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரச சிகிச்சை பிரிவிற்கு சென்று எத்தனை நோயாளிகள் வந்துள்ளனர் என கேட்டார். நர்ஸ் எத்தனை பேர் பணியில் உள்ளன என கேட்டறிந்தார்.

சிகிச்சைக்காக குழந்தையுடன் காத்திருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அருகில் உள்ள ஸ்கேன் பிரிவுக்குச் சென்ற போது ஏராளமான நோயாளிகள் காத்திருந்தனர். அப்பகுதியில் லைட் எரியவில்லை, பேன் வசதிகளும் இல்லை வெயில் புழுக்கத்தில் வியர்வையை துடைத்தபடியே சோகத்துடன் அமர்ந்திருந்தனர். அங்கிருந்த நோயாளிகள் ஸ்கேனுக்கு கட்டணம் செலுத்தி டாக்டருக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர். மேலும் விரைவாக எடுப்பதற்கு மருத்துவமனை ஊழியர்களுக்கும் பணம் தரவேண்டியுள்ளது என புகார் கூறினார்.

ஸ்கேன் மையத்துக்குள் சென்றவர் அங்கிருந்த ஊழியரிடம் தினம் எத்தனை பேருக்கு ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஸ்கேன் பரிசோதனை முடிவு ஏன் தாமதமாகிறது என கேட்டார். மருத்துவர் பற்றாக்குறையால் ஸ்கேன் பரிசோதனை முடிவு அறிவிப்பதில் தாமதமாவதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹார்லால், நிலைய மருத்துவர் சாதிக் அலி ஆகியோர் கூறினர். கூடுதல் டாக்டர் நியமித்து உடனுக்குடன் ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுப்பதாக நோயாளிகளிடம் தெரிவித்தார். கண்காணிப்பாளரிடம் கட்டணம் தொடர்பாக பிரச்னைகள் வராத வகையில் பார்த்துக்கொள்ளுமாறு கூறினார்.

நோயாளிகள் கூறுகையில், கலெக்டரின் திடீர் வருகையால் மருத்துவமனை ஊழியர்கள் பதற்றமடைந்தனர். அடிக்கடி இதுபோல ஆய்வு நடத்தினால் தனியார் மருத்துவமனைகளை விட உயர்தரமான சிகிச்சை அளிக்க முடியும் என்றார். ஸ்கேன் கட்டணம் பற்றி கலெக்டர் கேட்டதற்கு கண்காணிப்பாளர் ஜவகர்லாலும், ஸ்கேன் பிரிவு ஊழியர்களும் மாறி மாறி கூறினர். குழப்பமடைந்த கலெக்டர் கட்டணம் குறித்து புகார் வராத வகையில் ஸ்கேன் பிரிவு செயல்பட அறிவுறுத்தினார்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...