×

பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம், ஜூன் 13:  ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக 33 மாணவர் விடுதிகளும், 22 மாணவியர் விடுதிகளும் செயல்படுகின்றன. அதேபோல, கல்லூரி செல்லும் மாணவர்களுக்காக 4 விடுதிகளும், 5 மாணவியர் விடுதிகளும் என மாவட்டத்தில் மொத்தம் 64 மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர்.

கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ படிப்பு மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்தவர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

அனைத்து விடுதிகளிலும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். மேலும் பத்து மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 20ம் தேதிக்குள்ளும் கல்லூரி விடுதிகளுக்கு வரும் ஜூலை 15ம் தேதிக்குள்ளும் கொடுக் கவேண்டும். விண்ணப்பத்துடன் சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமான சான்றிதழ்களை அளிக்கத் தேவையில்லை.

விடுதிக்குத் தேர்வு செய்யப்பட்டு சேரும்போது மட்டும் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுகு என தனியே 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசின் இச்சலுகைகளை சம்பந்தப்பட்டோர் பெற்று பயனடைய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை