×

இடைப்பாடி பகுதிகளில் மழை பெய்ய வேண்டி கொடும்பாவி ஊர்வலம்

இடைப்பாடி, ஜூன் 13: இடைப்பாடி பகுதியில் மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து கொடும்பாவியை இழுத்துச் சென்று ஊர்வலம் நடத்தினர். இடைப்பாடி தாலுகா மற்றும் நகரப்பகுதிகளில் ஏரி, தடுப்பணைகள், குட்டைகள் உள்ளிட்டவை வறண்ட பாலைவனமாக மாறிவிட்டது. கிணறுகளிலும் நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டதால், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். இதனையடுத்து, மழை பெய்ய வேண்டி கொடும்பாவி ஊர்வலம்  செல்ல முடிவெடுத்தனர். அதன்படி, மலங்காட்டு பகுதியை சேர்ந்த மேட்டாங்குடி விவசாயிகள் கொடும்பாவி செய்து, அதனை ஊர்வலமாக எடுத்து சென்று ஒப்பாரி வைத்து ஒவ்வொரு ஊராக சுற்றி வந்தனர்.

அதனை தொடர்ந்து, இடைப்பாடி எல்லையான பெரிய ஏரியில் உள்ள சுடுகாட்டில் பாடை கட்டி போட்டு விட்டு வந்தனர். இதனை தொடர்ந்து, இடைப்பாடி பெரிய ஏரியை சேர்ந்த பொதுமக்கள் அங்கிருந்த கொடும்பாவியை மீண்டும் எடுத்து சென்று, பாடைகட்டி அழுதவாறே இடைப்பாடியில் உள்ள முக்கிய வீதிகளில் சுற்றி வந்தனர். இறுதியாக, இடைப்பாடி நகராட்சி எல்லையான கா.புள்ளிபுதூர் மயானத்தில் கொடும்பாவியை போட்டு சென்றனர். கொடும்பாவியை ஊர்வலமாக எடுத்து சென்று ஊரை சுற்றி வந்தால் மழை பெய்யும் என்பதன் அடிப்படையில் நடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை