×

கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஓமலூர், ஜூன் 13: ஓமலூர் நகரில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஓமலூர் நகர பகுதிகளில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, சேலம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடிக்கு புகார்கள் வந்தன.

இதனை தொடர்ந்து, சரக்கப்பிள்ளையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன் மற்றும் ஆய்வாளர்கள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஓமலூர் நகர பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் கோயில்கள் அருகே உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக சிக்கியது. இதையடுத்து, பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தன அதிகாரிகள், தீயிட்டு அழித்தனர். மேலும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மற்றும் புகை பிடிக்க அனுமதித்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

வாழப்பாடி அருகே பேளூரில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நந்தினி தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, பொது இடங்களில் புகைபிடித்த 5 பேர் மீதும், புகையிலை விற்பனை விதிகளை பின்பற்றாத 9 கடைக்காரர்களுக்கும் ₹2,300 அபராதம் விதித்தனர்.

Tags : stores ,
× RELATED குட்கா விற்பனை செய்த 3 மளிகை கடைகளுக்கு சீல்