×

பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றிய 16 சாயப்பட்டறைகளை அகற்ற உத்தரவு

பள்ளிபாளையம், ஜூன் 13: கழிவுநீரை  சுத்தப்படுத்தாமல் வெளியேற்றியதால், பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் உள்ள 16 உரிமம் பெற்ற சாயப்பட்டறைகளை  அப்புறப்படுத்தும்படி, சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.  இதையடுத்து மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். காவிரி ஆற்றையும், நிலத்தடி நீர்வளத்தையும்  பாதிக்கும் சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கடந்த 20 ஆண்டுகளாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இருந்த போதிலும் ஆங்காங்கே  அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகளால் சாய கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு  காணப்படவில்லை. அரசு அனுமதி பெறாத சாயப்பட்டறைகளை இடித்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் குமாரபாளையம்  மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், அனுமதி பெற்ற சாயப்பட்டறைகளை  கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து உரிய  அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள் சில, அதிகாரிகளை ஏமாற்றும் விதமாக சாயக்கழிவுநீரை  சுத்தப்படுத்தாமல், நேரடியாக சாக்கடையில் வெளியேற்றி காவிரி ஆற்றை  மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக  புகார்கள் வந்தன. இதையடுத்து குமாரபாளையம் மாசுகட்டுப்பாட்டு துறை  சுற்றுசூழல் பொறியாளர் ஜெயலட்சுமி மற்றும் உதவி பொறியாளர்கள்  விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் செயல்படும், அனுமதி பெற்ற சாயப்பட்டறைகளை  கண்காணித்து வந்தனர். இதில் பள்ளிபாளையம் அடுத்த களியனூர்,  ஆவத்திபாளையம் பகுதியில் 13 சாயப்பட்டறைகள் கழிவுநீரை சுத்தப்படுத்த வசதி  இருந்தும், அவற்றை சுத்தப்படுத்தாமல் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோல் குமாரபாளையத்தில் கொளத்துகாடு பகுதியில் 3 சாயப்பட்டறைகள்  கட்டுப்படாமல் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து இந்த சாயப்பட்டறைகளின்  உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் முறைப்படி எச்சரிக்கை கொடுத்த போதிலும்,  சாயக்கழிவுகளை சுத்திகரிப்பதில் அலட்சியம் காட்டப்பட்டது. அதிகாரிகளின்  நடவடிக்கைக்கு கட்டுப்படாத இந்த 16 சாயப்பட்டறைகள் மீதும் நடவடிக்கை  எடுக்கும்படி, சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு  பரிந்துரைக்கப்பட்டது.  இந்த பரிந்துரையை ஏற்ற வாரியம், மேற்கண்ட 16  சாயப்பட்டறைகளையும் தடைசெய்து அப்புறப் படுத்திட உத்தரவிட்டுள்ளது.

இதன்படி  முதற்கட்டமாக மேற்கண்ட சாயப்பட்டறைகளில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க  மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நேற்று மின்வாரிய ஊழியர்கள், பள்ளிபாளையத்தில் உள்ள ஆறு சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு  துண்டித்தனர்.  தொடர்ந்து மீதமுள்ள சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை  துண்டித்து, சாயப்பட்டறைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் குமாரபாளையம்  மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Pallipalayam ,cavity river ,Kumarapalayam ,
× RELATED பதற்றமான வாக்குசாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு