×

ரயில்வேயில் வேலை ஆசை காட்டி பட்டதாரியிடம் ரூ.80 ஆயிரம் மோசடி கமிஷனரிடம் புகார்

மதுரை, ஜூன் 13: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மதுரை பட்டதாரியிடம் ரூ. 80 ஆயிரம் பணத்தை வசூலித்த மர்மகும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை திருநகர், ஹார்விபட்டியை சேர்ந்தவர் ராம்பிரசாத். பட்டதாரியான இவர், இந்தியன்  இரயில்வேயில் ஒப்பந்த வேலை குறித்து வந்த விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். எதிர் முனையில் பேசியவர்கள், முதலில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து அதன்பின்தான் நிரந்தரம் செய்யப்படுவீர்கள். விண்ணப்பத்திற்கு ரூ.700 செலுத்த வேண்டும் என்று கூறி ஒரு வங்கியின் கணக்கு எண்ணை கொடுத்துள்ளனர். இதை நம்பி அந்த கணக்கிற்கு ராம்பிரசாத் பணத்தை செலுத்தி உள்ளார். பின்னர் ராம்பிரசாத் வீட்டிற்கு, மும்பை விலாசத்திலிருந்து ஒரு தபால் வந்தது. அதில் பாலிசி எடுக்க, ரூ.20 ஆயிரம் அனுப்பும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே ரூ.20 ஆயிரத்து 500ஐ அனுப்பி உள்ளார்.

மீண்டும் ராம்பிரசாத்தை தொடர்பு கொண்டவர்கள், உங்களுக்கு ரூ.20 லட்சத்திற்க்கான பாலிசி செக் அனுப்பியுள்ளோம், இதற்கான கமிஷன் ரூ.40 ஆயிரத்தை செலுத்திவிட்டால், உங்களுக்கு பணி உறுதி என்று குறிப்பிட்டனர்.  இதையும் நம்பிய ராம்பிரசாத், இறுதியாக ரூ.40 ஆயிரத்தை, அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். ஆனால் சில தினங்கள் கழித்து, ராம்குமாரை தொடர்பு கொண்ட கிரிமினல்கள், நீங்கள் பணத்தை தாமதமாக அனுப்பி உள்ளீர்கள், இதனால் வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டனர். அதன்பின் ராம்பிரசாத் தொடர்பு கொண்டால் யாரும் எடுப்பதில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த ராம்பிரசாத், ரயில்வே அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள், இந்த விளம்பரத்திற்கும் ரயில்வேக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறி, போலீசில் புகார் கொடுக்க சொல்லி உள்ளனர். அதன்படி ராம்பிரசாத், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : fraudster ,Commissioner ,railway ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...