பரமத்திவேலூர் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க 5 இடங்களில் செக்போஸ்ட்

நாமக்கல், ஜூன் 13: பரமத்திவேலூர் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க, 5 இடங்களில் போலீசார் செக்போஸ்ட் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள சின்னகரசபாளையம், வெங்கரை, பெரியகரசபாளையம், குப்புச்சிபாளையம், வெங்கரை உள்ளிட்ட இடங்களில் மணல் கொள்ளை அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலப்பட்டி கூடுதுறையில் செயல்பட்டு வரும் மாட்டு வண்டிகளுக்கான அரசு மணல் குவாரியில் இருந்தும், முறைகேடாக தினமும் அதிகமான மாட்டு வண்டிகளில் மணல் லோடு செய்யப்பட்டு, அவை லாரிகள் மூலம் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. தற்போது பரமத்திவேலூர் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதால், மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, அமைச்சர் தங்கமணி மாவட்ட எஸ்பிக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் எதிரொலியாக பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள எஸ்.வாழவந்தி, பாலப்பட்டி குமாரபாளையம் பிரிவு ரோடு, குப்புச்சிபாளையம் பாலம், பொன்மலர் பாளையம் ஆகிய 5 இடங்களில் செக்போஸட் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  கடந்த 20 நாளில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 40 லாரிகள், 10 பொக்லைன் இயந்திரத்தை பரமத்திவேலூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மணல் கடத்தலில் மறைமுகமாக ஈடுபட்டு வந்த ஆளுங்கட்சி பிரமுர்களுக்கு சொந்தமான வாகனத்தையும், போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பாலப்பட்டியை சேர்ந்த வேலு என்பவர் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தார். இவரை கடந்த மாதம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். மணல் கொள்ளையை தடுக்க போலீசாரின் திடீர் அதிரடி நடவடிக்கை, பல ஆண்டாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: