×

கால்நடைகளுக்காக திருமங்கலம் காவிரி கூட்டுக்குடிநீர் பைப்லைன் உடைப்பு அதிகரிப்பு

திருமங்கலம், ஜூன் 13: திருமங்கலம் நகராட்சி, ஒன்றிய பகுதிகளுக்கு தினசரி விநியோகம் செய்யப்படும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லயன்கள் கிராமபகுதிகளில் தொடர்ந்து உடைப்பதால் குடிநீர் பிரச்னை உண்டாகி வருகிறது.திருமங்கலம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கரூரிலிருந்து பைப்லயன் மூலமாக திண்டுக்கல் மாவட்டம் கோட்டையூர், மதுரை விளாங்குடி வழியாக செக்காணூரணி மீனாட்சிபட்டி வரும் காவிரிநீர் அங்கிருந்து திருமங்கலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. திருமங்கலம் நகராட்சிக்கு தினசரி 33 லட்சம் லிட்டர் குடிநீரும், ஒன்றியத்தில் மொத்தமுள்ள 38 ஊராட்சிகளில் 36 ஊராட்சிகளுக்கு 30 லட்சம் லிட்டர் குடிநீரும் இத்திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படுகிறது. அதேநேரத்தில் திருமங்கலம் நகராட்சியில் மொத்தமுள்ள வீடுகள் 16, 800. இதில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ள வீடுகள் 5, 800. இவற்றில் சுமார் 2000 வணிக நிறுவனங்களாகும். தற்போது நகராட்சி மீதமுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.இதனால் தண்ணீரின் தேவை மேலும் அதிகரிக்கும் சூழல் உண்டாகியுள்ளது.

 இந்நிலையில் மதுரை மாவட்ட கிராம பகுதிகளில் பலர் தங்களின் தேவைக்கும், கால்நடைகளுக்காகவும் பைப் லயன்களில் ஆங்காங்கே இருக்கும் ஏர்பைப்களின் அருகேயுள்ள குழாய்களை உடைத்து தண்ணீர் எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் திருமங்கலம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு தினசரி விநியோகம் செய்யப்படும் தண்ணீர் அளவு குறைந்து குடிநீர் பிரச்னை உண்டாகிறது. இதுகுறித்து அதிகாரிகள் எச்சரிக்கை செய்தாலும் குழாய் உடைப்பு தினசரி தொடர்கதையாகிறது. இதுகுறித்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘பல 100 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து திருமங்கலத்திற்கு காவிரி குடிநீர் வருகிறது. ஆனால் வழியோர கிராமமக்கள் ஆடு, மாடு உள்ளிட்டவைகளுக்காக குழாய்களை உடைத்து விடுகின்றனர். இதனால் கூட்டுக்குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. குழாய் உடைப்பவர்கள் மீது போலீசில் புகார் செய்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் குழாய் உடைப்பு சம்பவங்கள் தினசரி அதிகரித்து வருகிறது. நாங்கள் பைப்லயன்களை தீவிரமாக கண்காணித்தாலும் தினசரி எங்கையாவது உடைத்து விடுகின்றனர்’ என்றனர்.

Tags : Tirumangalam ,
× RELATED சென்னை திருமங்கலத்தில் உள்ள...