அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரியுங்கள்

நாமக்கல்,  ஜூன் 13: அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என டிஇஓ அறிவுரை வழங்கினார். நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில், வட்டார கல்வி  அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், நேற்று மாவட்ட கல்வி அலுவலர் (பொ)  உதயக்குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், தனியார் பள்ளிகளில்  இருந்து அரசு பள்ளியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளின் விபரங்கள் மற்றும்  புதியதாக சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்களை கல்வித்துறையின் இணையதளமான  எமிஸில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில்  காலிப்பணியிடங்கள் விபரம், மாணவர் சேர்க்கை அதிகரிப்பு போன்றவை குறித்து  ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் (பொ)  உதயக்குமார் பேசுகையில், ‘அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள  எல்கேஜி வகுப்புகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வட்டார கல்வி  அலுவலர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகள் தோறும் ஆய்வுசெய்து  மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். அரசு பள்ளிக்கு வரும்  குழந்தைகளுக்கு புதிய பாடத் திட்டத்தை, நல்லமுறையில் கற்பிக்க  ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்,’ என்றார். கூட்டத்தில் நேர்முக உதவியாளர் முருகேசன் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED அரசு பள்ளிகளில் பாழாகும் கம்ப்யூட்டர்கள்...?