×

திண்டுக்கல் மாவட்டத்தில் நீர்நிலைகள் இணையதளத்தில் பதிவேற்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய திட்டம் துவக்கம்

திண்டுக்கல், ஜூன் 13: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகள் முழு விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகள் ஏற்படின், அரசுக்கு தகவல் அளித்து உடனுக்குடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்ந்து போன பல்வேறு நீர்நிலைகளை மீட்டெடுத்து பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை பொதுப்பணித்துறை மற்றும் ஊரகவளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள 637 குளங்கள் சர்வே செய்யப்பட்டு, 393 ஏக்கர் பரப்பளவில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள குளங்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றை அரசு மற்றும் பங்களிப்புடன் 200 கி.மீ., தூரத்திற்கு வரத்து மற்றும் போக்குவாய்கள், 338 எண்ணிக்கையிலான குளங்கள் தூர்வாரி புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தங்குதடையின்றி நீர் வரத்து ஏற்படுவதுடன், நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களின் அமைவிடம், குளத்தின் தன்மை, மொத்த பரப்பு, சர்வேஎண், எல்லை விபரம் ஆகியவை அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து குளங்களுக்கு எல்லை கற்கள் நிறுவப்பட்டு, ஒவ்வொரு குளத்திற்கு தனித்தனியே தகவல் பலகை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் குளங்ளின் எல்லையில் எல்லை கற்கள் நிறுவபட்டுள்ளதை ஜி.பி.எஸ்., கோஆர்டினேஸ் எடுக்கப்பட்டு, நீர் நிலைகளை பாதுகாக்க நிரந்தரமாக ஆவணப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளின் முழு விபரங்கள் திண்டுக்கல் மாவட்ட https//dindigul.nic.in எனற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுநிலை அமைப்புகள், பொதுமக்கள் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்வதோடு, மேற்படி தகவல்களின் அடிப்படையில் தங்கள் கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை ஏற்படின், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆளும்கட்சியினர் ஆக்கிரமிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் ஊரின் குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் வெள்ளரி, பப்பாளி உட்பட பல விவசாயத்தை ஆக்கிரமிப்பாளர்கள் செய்து வருகின்றனர். அனைத்து குளங்கள், கண்மாய்கள், ஏரிகளிலும் அனுமதியின்றி மண் அள்ளப்படுகிறது. குளத்தை ஆக்கிரமித்து மண் அள்ளுபவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சிக்காரர்களாக உள்ளனர். இவர்களை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும், புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் காயும் பயிர்களை காக்க முடியவில்லை.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அதிகாரிகள் பெயர் அளவில் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை. மழைகாலம் துவங்கும் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த வாரம் வடமதுரை, வேடசந்தூர் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.இதுகுறித்து கலெக்டர் வினயிடம் கேட்டபோது: குளங்கள், கண்மாய்கள், ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அகற்றும் நடவடிக்கையில் நாங்கள் இறங்குவோம். பொதுமக்கள், அந்தந்த கிராமங்களில் உள்ள இளைஞர்கள் ஆக்கிரமிப்பாளர்களை அடையாளம் காண வேண்டும்.ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் இணையதளத்தில் சந்தேகம் ஏற்பட்டாலும் என்னிடம் மனு அளிக்கலாம். நீர் நிலைகளை காப்பதுதான் நமது முதல் கடமை என்பதை அறிந்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மழைகாலம் துவங்கும் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம். ஆக்கிரமிப்பு குறித்து தகவல் தெரிவிப்பவர்கள் பெயர், ஊர்கள் ரகசியமாக வைக்கப்படும்’ என்றார்.

Tags : Dindigul district ,
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை...