×

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு 5ம் தேதி தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 13:  கிருஷ்ணகிரி அணையில் இருந்து, முதல்போக சாகுபடிக்கு ஜூலை 5ம் தேதி முதல் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் ஒப்புதல் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி அணையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 40.20 அடியாக இருந்தது. அணையில் இருந்து 257 கன அடி தண்ணீர், பாரூர் ஏரியில் நிரப்புவதற்காக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் முதல்போக சாகுபடிக்கான பணிகளை துவங்க உள்ளதால், பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து நேற்று, கிருஷ்ணகிரி அணையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள், பாசன விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முதல் போக சாகுபடிக்கு வருகிற ஜூலை மாதம் 5ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் ஒப்புதல் அளித்தனர். மேலும், அணையின் 7 பிரதான மதகை மாற்றி, புதிய மதகு அமைப்பது குறித்து ஒப்பந்தம் விடும் பணிகள் முடிந்த பின், விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Water opening ,Krishnagiri Dam ,
× RELATED சாத்தனூர் அணை நீர்மட்டம் 117.85 அடியாக...