×

குமரியில் 19ம் தேதி வரை நடக்கிறது 6 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடக்கம்

நாகர்கோவில், ஜூன் 13: குமரி மாவட்டத்தில் 6 தாலுகா அலுவலகங்களிலும் நேற்று வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் எனும் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் தொடங்கியது.ஆண்டுதோறும் வருவாய்த்துறையினரால் ஜூன் மாதத்தில் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை ‘ஜமாபந்தி’ என அழைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய 6 தாலுகா அலுவலகங்களிலும் 1,428ம் பசலிக்கான கிராம கணக்குகளை சரிபார்க்கும் வருவாய் தீர்வாய் கணக்கு சரிபார்த்தல் நிகழ்ச்சி நடப்பாண்டில் நேற்று தொடங்கியது. தோவாளை தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே கலந்துகொண்டு கிராம கணக்குகளை சரிபார்த்தார். மேலும் அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். தோவாளை தாலுகாவில் நேற்று வீரமார்த்தாண்டன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி வடக்கு மற்றும் தெற்கு, குமாரபுரம், செண்பகராமன்புதூர், மாதவலாயம், சண்முகபுரம், திருப்பதிசாரம் ஆகிய கிராமங்களின் வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.

திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி தலைமையில் வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டார். இங்கு காலையிலேயே 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் காத்து நின்றிருந்தனர். விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஷரண்யா அறி, கல்குளம் தாலுகா அலுவலகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ், கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் உதவி ஆணையர்(ஆயம்) சங்கரலிங்கம் ஆகியோரும் வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்த்தனர்.  அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியின்போது பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் முதல்  முறையாக கணினியில் பதிவு ெசய்யப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது. இந்த ஜமா பந்தி வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

Tags : Kumari ,taluk offices ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...