×

குப்பைகள் தேங்கி, புதர்கள் மண்டியதால் பறக்கிங்கால் கால்வாயில் அடைப்பு சாக்கடையாக மாறியது பழையாறு

நாகர்கோவில்,  ஜூன் 13 : பறக்கிங்கால் கால்வாய் அடைப்புகள் காரணமாக, பழையாற்றில்  தண்ணீர்  எதிர் திசை பாய்ந்து, பல்வேறு இடங்களில் சாக்கடையாக மாறி உள்ளது.குமரி மாவட்டத்தில் முக்கிய ஆறான பழையாறு, பராமரிப்பின்றி ஆகாய தாமரைகளாலும்,  கழிவு நீராலும் நிரம்பி கிடக்கிறது. நாகர்கோவில் மாநகரில் ஓடும் இந்த  ஆற்றில், ஒரு சில பகுதிகளில் மட்டுமே மக்கள் குளிக்க முடியும் என்ற நிலை  உள்ளது. இதில் வடசேரி ஆறாட்டு பகுதியில் உள்ள படித்துறைகளிலும் பொதுமக்கள்  குளிப்பது வழக்கம்.  இந்த பகுதியில் நாகர்கோவிலிலில் உள்ள முக்கிய  கோயில்களுக்கு அபிஷேகங்களுக்கு இங்கிருந்து தான் புனித நீர் எடுத்து  செல்லப்படுவது உண்டு. முக்கிய கோயில்களில் திருவிழாக்களின் போது சுவாமி  விக்ரகங்களை ஆறாட்டு பகுதிக்கு ெகாண்டு வந்து அபிஷேகம் முடித்து, அலங்காரம்  செய்தும் கொண்டு செல்வார்கள்.இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக இந்த  படித்துறை பகுதியில், தண்ணீர் சாக்கடையாக மாறி  துர்நாற்றம் வீசுகிறது.  ஆற்று தண்ணீரின் நிறமே கருப்பாக மாறி உள்ளது. நேற்றும் இந்த நிலை  நீடித்ததால் வடசேரி, ஒழுகினசேரி,  கிருஷ்ணன்கோவில், அருகுவிளை,  வாத்தியார்விளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இங்கு குளிக்க வந்த ஏராளமான  பெண்கள் மற்றும் ஆண்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.  தொடர்ந்து எதிர்திசையில் கழிவு  நீர் வந்த வண்ணம் உள்ளது. இது பற்றி  பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க  வில்லை என்று பொதுமக்கள் கூறி உள்ளனர்.

பழையாற்றின் குறுக்கே  வீரப்புலி, குட்டை, பள்ளிகொண்டான், சாட்டுப்புதூர், செட்டித்தோப்பு,  வீரநாராயணமங்கலம், சபரி, குமரி, சோழந்தட்டை, பிள்ளைப்பெத்தான் அணை, மிஷன்  அணை உள்ளிட்ட 14 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகள் பல இப்போது  உடைந்தும், பெயர்ந்தும் பயனற்ற நிலையில் உள்ளன. இதில் சபரி அணையில்  இருந்து பறக்கிங்கால் ஓடை வழியாக  மறுகால் திறந்து விடப்படுவது வழக்கம்.  தற்போது பறக்கிங்கால் ஓடை சாக்கடை கலந்து உள்ளது. இந்த தண்ணீர் பறக்கை  பெரியகுளம், தெங்கம்புதூர் பால்குளத்துக்கு செல்லும் தண்ணீர் ஆகும். ஆனால்  பறக்கிங்கால் கால்வாயில் குப்பைகள் தேங்கிய புதர்கள் மண்டியும் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாக்கடை நிரம்பி பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதனால்  தண்ணீர் செல்ல முடியாமல், எதிர்திசை நோக்கி பாய்கிறது. அதாவது பறக்கிங்கால்  பகுதியில் இருந்து ஊட்டுவாழ்மடம், கோட்டார் கால்வாய் வழியாக பறக்கை செல்ல  வேண்டிய கழிவு நீர், ஊட்டுவாழ்மடத்தில் இருந்து திரும்பி எதிர்திசை நோக்கி  பாய்கிறது. இதனால் ஒழுகினசேரி, வடசேரி வரை ஆற்றில் கழிவு நீர் கலந்து  விட்டதாக பொதுமக்கள் கூறி உள்ளனர். தற்போது மழை  தொடங்கி உள்ளது.  பறக்கிங்கால் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்து, ஷட்டர்களையும்  சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் பெரும்  பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் கூறி உள்ளனர். ஆனால் இந்த  விஷயத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிதி இல்லை என கூறி அலட்சியமாக  இருந்து வருகிறார்கள்.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு