×

சாலையில் ஓடையாக ஓடும் கழிவுநீர் முசிறியில் இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அரசு நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி எப்போது துவங்கும்?

தா.பேட்டை, ஜூன் 13: முசிறியில் அரசு நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாசகர்கள், கல்வியாளர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.முசிறியில் அரசு நூலகம் 1955ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 60 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 14 ஆயிரம் உறுப்பினர்கள் வாசகர்களாக உள்ளனர். தினசரி நூலகத்திற்கு சராசரியாக 200 பேர் வந்து தங்களுக்கு தேவையான நூல்கள், நாளிதழ்களை படித்து செல்கின்றனர். 4 நூலகர்களும், பதிவறை உதவியாளர் ஒருவரும், துப்புரவு பணியாளர் ஒருவரும் பணியாற்றுகின்றனர். முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே நூலகம் இயங்கி வந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்தது. மேற்கூரையிலிருந்த காரைகள் பெயர்ந்து விழுந்து கட்டிடம் உறுதித்தன்மையை இழந்து நின்றது. இதையடுத்து ஒன்னறை வருடங்களுக்கு முன்பு முசிறி நல்லமுத்துபிள்ளை தெருவில் ஒரு வாடகை கட்டிடத்திற்கு நூலகம் மாற்றப்பட்டது. தற்போது வரை நூலகம் வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. நூலக கட்டிடத்திற்கு வாடகை, கரண்ட் பில் உட்பட மாதம் ரூ.15 ஆயிரம் வரை செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நூகலத்திற்கு நிரந்தர கட்டிடமும், வாசகர்களுக்கு தேவையான கட்டமைப்புகளும் ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து தினகரனில் அப்போது செய்தி வெளியானது. இதையடுத்து முசிறிக்கு வந்த அப்போதைய திருச்சி கலெக்டர் ராஜாமணி, தா.பேட்டை ரோட்டில் நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் வழியில் அரசுக்கு சொந்தமான இடத்தை நூலக கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்தார். ஆனால், இதுவரை நூலக கட்டிடம் கட்டுவதற்காக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் எந்தவிதமான முயற்சி மேற்கொண்டனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதுகுறித்து முசிறியை சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான தமிழ்ச்செல்வன் என்பவர் கூறுகையில், கிராமப்புற, நகர்புற மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஊர்ப்புற நூலகங்கள் மிகுந்த உதவியாக உள்ளது. இதற்காக கிராமங்களில் காமராஜர், அண்ணா ஆகியோரது ஆட்சி காலத்தில், படிப்பகங்கள் நிறைய திறக்கப்பட்டன. அதன் மூலம் இளைய தலைமுறை நிறைய தகவல்களை படித்து பயன்பெற்றனர். தங்களது அறிவை வளர்த்துக்கொண்டனர். அந்த வகையில் தொகுதியின் தலைமை இடமாக உள்ள முசிறியில் இயங்கும் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் இல்லை என்பது கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியின் முன்னாள் கலெக்டர் ராஜாமணி, முசிறியில் நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் நூலக கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்த நிலையில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது.

இதனால் முசிறியில் உள்ள அரசு நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கும் நிலையில் உள்ளது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. சொந்த கட்டிடத்தில் நூலகம் இயங்கினால் வாடகை மிச்சமாகும். மக்களின் வரிப்பணம் வீணாகாது. எனவே முசிறி அரசு நூலகம் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு தற்போதைய கலெக்டர் சிவராசு உரிய நடவடிக்கை உடன் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.சிறுவர்கள், முதியோர், மாணவ, மாணவிகள், பெண்கள் பலரும் அமர்ந்து படித்து பயன்பெறும் வகையில் மேம்பட்ட வசதியுடன் நூலக கட்டிடத்தை கட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.முசிறியில் உள்ள அரசு நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கும் நிலையில் உள்ளது.  இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. சொந்த கட்டிடத்தில் நூலகம் இயங்கினால் வாடகை மிச்சமாகும். மக்களின் வரிப்பணம் வீணாகாது.


Tags : library ,location ,road ,wasteland ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நூலகம் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது