×

ராஜகோபால் பூங்கா அருகே சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்

தர்மபுரி, ஜூன் 13: தர்மபுரி பஸ் நிலையம் ராஜகோபால் பூங்கா அருகே, சாலையில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை போலீசார் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தர்மபுரி நகரில் 50 ஷேர் ஆட்டோக்களும், சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அனுமதியின்றி ஷேர் ஆட்டோக்களாக இயக்கப்படுகின்றன. ஷேர் ஆட்டோக்கள் பேருந்து நிலையம் அருகில் ஏவி தியேட்டர் தெருவில் இருந்து இயக்கப்படுகிறது. அனுமதியில்லாமல் ஷேர் ஆட்டோக்களாக இயக்கப்படும் ஆட்டோக்கள், ராஜகோபால் பூங்கா அருகே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கின்றன. இந்நிலையில் ராஜகோபால் பூங்கா அருகே நிறுத்தப்படும் ஆட்டோக்கள் பஸ்கள், சேலம் மார்க்கத்தில் திரும்பி செல்லும் சித்த வீரப்ப செட்டி சந்திப்புகளில் நிறுத்தி நீண்ட நேரம் காத்திருப்பதால், பஸ்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், முகமது அலி கிளப் ரோடு, சித்தவீரப்ப செட்டி தெரு, சேலம் பைபாஸ் சாலை என அனைத்து சாலை சந்திப்புகளில் அனுமதியில்லாத ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தொடர்பாக வாகன ஓட்டிகள் ஆட்டோ டிரைவர்களை தட்டிக்கேட்டால் தகாத வார்த்தைகளால் சில ஆட்டோ டிரைவர்கள் திட்டுகின்றனர். தினமும் சித்தவீரப்ப செட்டி தெருவில் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் ஆட்டோக்கள் பயணிகளை நிறுத்தி ஏற்றி செல்ல முறையான வழிகாட்டுதல்களை அறிவுறுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : park ,Rajagopal ,
× RELATED கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்...