×

தர்மபுரி மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும்

தர்மபுரி, ஜூன் 13: தர்மபுரி மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் நேரில் மனு அளித்து வலியுறுத்தினார். சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் அளித்த மனுவில் கூறியிருப்பது: தர்மபுரி மாவட்டத்தில் பெரிய அளவிலான நீர்ப்பாசன திட்டங்கள் ஏதுமில்லை. கடந்த 3 ஆண்டுகளாக போதிய அளவில் பருவமழை பெய்யாததால், விவசாயிகள் வேலை தேடி வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தர்மபுரி மாவட்டத்தில் புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கே.ஈச்சம்பாடியில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு வழியாக, தொடர் மழைக்காலங்களில் அதிக அளவில் உபரி நீர் வெளியேறி கடலில் சேருகிறது.

கே.ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றும் திட்டத்தின் வழியாக தண்ணீர் எடுத்துச் சென்றால், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள 66 ஏரிகளில் தண்ணீரை நிரப்ப முடியும். இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீரும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, கே.ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றும் திட்டத்தின் வழியாக, ஏரிகளில் தண்ணீரை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், அரூர் பெரிய ஏரியின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரூர்- திருப்பத்தூர் சாலையில், அண்ணா நகர் பகுதியிலுள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கெலவள்ளி ஊராட்சி, செங்குட்டை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Tags : Dharmapuri district ,
× RELATED கள்ளத்துப்பாக்கியை ஒப்படைக்காவிட்டால் குண்டாஸ்