×

ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கையில் தெளிவாக சரியான முறையில் உச்சரிப்பை சொல்லித்தர வேண்டும்

புதுக்கோட்டை, ஜூன் 13: ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தரும்போது தெளிவாக சரியான முறையில் உச்சரிப்பை சொல்லிக் கொடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா பேசினார்.புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் புதிதாக அங்கன்வாடி மையங்களில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான 3 நாள் பணியிடை பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கட்டிடத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா தலைமையில் நடைபெற்றது.பயிற்சியினை தொடங்கி வைத்து சிஇஓ வனஜா பேசியதாவது: பொதுவாக 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 90 சதவீத மூளை வளர்ச்சி நடைபெறுகிறது.இந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான கற்பித்தலை மாண்டிசோரி முறையில் கற்றுக்கொடுக்கிறோம். இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரிக்கிறது. மேலும் பெற்றோரும் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என எண்ணுகின்றனர். இந்த வயதில் 7 மொழிகளை குழந்தைகள் சாதாரணமாக கற்றுக்கொள்ள முடியும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

எனவே தான் மொழி வளர்ச்சிக்குத் தேவையான பாடல்கள், கதைகள் போன்ற செயல்பாடுகளைக் கொண்டு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. எனவே ஆசிரியர்கள் இங்கு நடைபெறும் பயிற்சி வகுப்பில் நன்றாக கற்றுக்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்போது தெளிவாக சரியான முறையில் உச்சரிப்பை சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் (பொ), உதவித் திட்ட அலுவலர் (பொ) ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியின் கருத்தாளராக சாலைவேலம்மாள், கீதா, விவிலி ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியில் அங்கன்வாடி மையங்களில் நியமனம் செய்யப்பட்ட எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் 84 பேர் மற்றும் 13 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெகுநாததுரை மற்றும் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.


Tags : teachers ,children ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...