×

கட்டி முடித்து 3 ஆண்டாகியும்

திருமயம், ஜூன் 13: திருமயத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு நிலம், கட்டிடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி தலா 2 பேரூராட்சி, தாலுகாக்கள், 3 ஒன்றியங்கள், 108 ஊராட்சிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் காரைக்குடி, ராமேஸ்வரம், மதுரை, மானாமதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையில் திருமயம் உள்ளது. மேலும் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக திருமயம் விளங்குகிறது. இதனிடையே திருமயத்தை மேம்படுத்த தேர்தலின் போது பல்வேறு அரசியல் கட்சிகளும் வாக்குறுதி வாரி கொடுத்தாலும் தேர்தலுக்கு பின்னர் திருமயம் தொகுதி கண்டு கொள்ளப்படாமலே போய்விடுகிறது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன் திருமயம் பகுதியில் உள்ள கிராமங்களை பஸ் போக்குவரத்து மூலம் இணைக்கும் நோக்கில் திருமயத்தில் அரசு போக்குவரத்து பணிமனை தொடங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால் திருமயம் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்காக திருமயம் அருகே உள்ள துளையானூர் பஞ்சாயத்திற்குட்ட பகுதியில் சுமார் 8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து பணிமனைக்காக சுமார் 18 லட்சம் செலவு செய்து கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் செயல்படாமல் உள்ளது.எனவே கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆனா நிலையில், இதுவரை அதிகாரிகள் பணிமனை இயங்க நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. தற்போது அங்கு கட்டிடம் மட்டுமே உள்ள நிலையில் ஒரு காவலாளி மட்டும் பணியில் இருந்து வருகிறார். எனவே எப்போது அரசு பணிமனை செயல்பாட்டுக்கு வரும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதுபற்றி திருமயத்தை சேர்ந்தவரிடம் கேட்டபோது திருமயத்திற்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. திருமயத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தற்போது புதுக்கோட்டை, காரைக்குடி, பொன்னமராவதி பணிமனையில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் ஒரு சில கிராமங்களுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இன்றளவும் திருமயம் பகுதியில் பஸ் வசதி இல்லாத பல கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் திருமயத்தில் அரசு போக்குவரத்து பணிமனை தொடங்கும் அரசின் முடிவு இப்பகுதி மக்களுக்கு சற்று ஆறுதலாகவே இருந்தது. காரணம் திருமயம் பணிமனை மூலம் குறைந்தது 5 பஸ்கள் இயக்கினாலே திருமயத்தை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்கள் பஸ் வசதி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு கட்டிடத்துடன் நின்றுவிட்டது அப்பகுதி மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.எந்த ஒரு தொலை நோக்கு பார்வையும் இல்லாமல் அரசு ஏன் பல லட்சம் மதிப்புள்ள ஒரு திட்டத்தை அறிவித்து அதனை பாதியில் நிறுத்த வேண்டும்.இதனால் அரசுக்கு பல லட்சம் வீணானது தான் மிச்சம். மேலும் பணிமனைக்கான பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் செயல்பாட்டுக்கு வராததால் வளாகம் முழுவதும் புதர் செடிகள் மண்டி காடுபோல் மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம் அரசு போக்குவரத்து பணிமனையை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதோடு, திருமயம் சுற்றுவட்டார கிராமங்களை பஸ் மூலம் திருமயத்துடன் இணைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு செய்வதன் மூலம் திருமயம் மேலும் வளர்ச்சி அடையும் என்றார்.


Tags : building ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...