×

கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சியில் பஸ் பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதி: கடும் வெயிலில் வாடும் மாணவ, மாணவிகள்

வாலாஜாபாத், ஜூன் 13: வாலாஜாபாத் ஒன்றியம் கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சி, வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் இருக்கிறது. இங்கு, 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், மாற்றுத் திறனாளிகள் விடுதி உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இந்த ஊராட்சியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காஞ்சிபுரம், வாலாஜாபாத், நாயக்கன்பேட்டை, ஏகனாம்பேட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். மேலும், கிராமத்தில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வாலாஜாபாத், பெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர்.
கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சியில் பஸ் நிறுத்தம் உள்ளது.

ஆனால், பயணிகளுக்கான நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் மழை, வெயில் காலங்களில் மாணவ, மாணவிகளும், கிராம மக்களும், முதியவர்களும், பெரும் சிரமம் அடைகின்றனர். இந்த பகுதியில், பஸ் பயணிகளுக்கான நிழற்குடை அமைக்க வேண்டும் என ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், கீழ் ஒட்டிவாக்கம் பகுதி காலை, மாலையும் எப்போதுமே பொதுமக்கள் அதிகம் கூடுவதால், பரபரப்பாக காணப்படும். இங்கு நிழற்குடை இல்லாததால், பஸ் நிறுத்தத்தில் நிற்பவர்கள்  வெயிலிலும், மழையிலும் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறோம்.
இந்த சூழ்நிலையில், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒரு தொகையை ஒதுக்கீடு செய்து, இப்பகுதியில் பஸ் பயணிகளுக்கான நிழற்குடை அமைத்தால், அனைத்து தரப்பினரும் பாதுகாப்புடன் இருப்பார்கள் என்றனர்.

Tags : Bus passengers ,panchayaths ,girls ,
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே