மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் அபேஸ்: பீரோவை உடைத்து பணம், நகை கொள்ளை

திருப்போரூர், ஜூன் 13: திருப்போரூரில், கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த வழிப்பறி கொள்ளை, வீடு புகுந்து திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்கள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை, மாடியில் தூங்கியவர்களிடம் கொள்ளை என தொடர்ச்சியான கொள்ளை சம்பவங்கள் நடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து போலீசார், இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். இதையொட்டி கடந்த 20 நாட்களாக ஓய்ந்திருந்த கொள்ளை சம்பவம் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமம், பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (35). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மகாலிங்கம், சுமார் 11 மணிக்கு வீடு திரும்பினார். முன்னதாக, மனைவி பரிமளா, வீட்டை பூட்டி விட்டு, மொட்டை மாடியில் குழந்தைகளுடன் தூங்க சென்று விட்டார். மனைவியிடம் வீட்டின்  சாவியை வாங்கி வந்த அவர், உடை மாற்றி கொண்டு, சாப்பிட்டு முடித்து மீண்டும் மொட்டை மாடிக்கு சென்று குடும்பத்தினருடன் தூங்கினார். வீட்டு சாவியை தலையணைக்கு அடியில் வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் எழுந்த மகாலிங்கம், வீட்டு சாவியைத் தேடிய போது காணாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, தூங்கி கொண்டிருந்த பரிமளாவை எழுப்பினார். அவர், எழுந்து பார்த்தபோது அவரது கழுத்தில் இருந்த தாலி செயின் காணாமல் போயிருந்தது.

உடனே, அவர்கள் கீழே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பூட்டு பூட்டியபடி இருந்தது. சாவியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 சவரன் நகைகள், ₹3 ஆயிரம், ஏடிஎம் கார்டு, வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். அப்போது மர்மநபர்கள், தலையணை அடியில் இருந்து சாவியை எடுத்து, வீட்டை திறந்து கொள்ளையடித்துள்ளனர். அப்போது, பரிமளாவின் கழுத்தில் இருந்த தாலி செயினை அபேஸ் செய்தது தெரிந்தது. மேலும் மர்மநபர்கள், போகும்போது வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருப்போரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: