×

அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய 46 வீடு, கட்டிடங்கள் இடித்து அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை


திருவொற்றியூர், ஜூன் 13: மணலி புதுநகரில் சிஎம்டிஏவுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வீடுகட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத்தில் உள்ளவர்களை காலி செய்ய வேண்டும் என்று சிஎம்டிஏ நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களிடம் அறிவித்திருந்தது. ஆனால்  பல ஆண்டு காலமாக குடியிருந்து வருவதால் அந்த இடத்தை காலி செய்யமாட்டோம் என்றும், இதே இடத்தில் தங்களுக்கு இலவச வீட்டுமனை பாட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சிஎம்டிஏ நிர்வாகம் அவர்களுக்கு பட்டா வழங்கவில்லை.

இந்நிலையில் இதே பகுதியில் சிஎம்டிஏவுக்கு சொந்தமான 19.7 ஏக்கர் நிலத்தை அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட குடிசைமாற்று வாரியத்துக்கு கொடுத்தது. இதன்படி இந்த இடத்தில் சுமார் ₹300 கோடி மதிப்பீட்டில் 3360 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பணி நடந்து வருகிறது. மேலும் குடிசை மாற்று வாரியத்துக்கு ஓப்படைக்கப்பட்ட இடத்தில் ஒரு பகுதியில் தற்போது மணலி புதுநகரில் குடியிருந்து வரும் சிலரது வீடுகள் வருவதால் அதை தங்களிடம் ஒப்படைக்குமாறு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்  கூறினர்.

ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.  இதைடுத்து நேற்று காலை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் புதுநகருக்கு வந்தனர். அங்கு ஆக்கிரமித்து கட்டிய சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இடிக்க கூடாது என்று போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக புரட்சி பாரதம் கட்சியை சேரந்த தொண்டர்களும் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்கிறோம் என்று கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தாம்பரம்: தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை கிழக்கு பகுதியில் உள்ள ராதாநகர், ஜமீன் ராயப்பேட்டை, நெமிலிச்சேரி, பாரதிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கடந்த பல ஆண்டுகளாக ஜிஎஸ்டி சாலைக்கு வர, குரோம்பேட்டை ரயில்வே கேட்டைதான் கடந்து செல்ல வேண்டும். இந்த கேட் அடிக்கடி மூடப்படுவதால் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதையடுத்து அங்கு கடந்த 2009ம் ஆண்டு ₹14.75 கோடி மதிப்பில் 4 சக்கர வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் துவங்கியது. இதையடுத்து அங்கு ரயில்வே தரப்பில் ₹4 கோடி செலவில் ரயில் பாதைக்கு கீழ், கான்கிரீட் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு பணிகளும் முடிந்தன. ரயில் பாதைக்கு கிழக்கே 1935 சதுர மீட்டர் மேற்கு பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான 900 சதுர மீட்டர் நிலம் இந்த திட்டத்துக்கு தேவைப்பட்டது. இந்த பணிக்காக, ராதா நகரில் உள்ள 46 கட்டிடங்களில் குறிப்பிட்ட அளவு இடிக்க வேண்டி இருந்ததால் அதற்காக ₹6.46 கோடி இழப்பீட்டு தொகையை நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்தனர். இது போதாதென 26 கட்டிட உரிமையாளர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி வீட்டு உரிமையாளர்கள் தொடுத்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மேல்முறையீட்டையும் நீதிமன்றம் ஏற்காமல் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி சுரங்கப்பாதை பணிக்கு தடையாக உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி ராதா நகர் பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அளவிடும் பணி நடந்தது. பின்னர் 46 கட்டிடங்களிலும் சுரங்கப்பாதை அமைப்பதற்கு தேவையான அளவில் இடிக்க தீர்மானிக்கப்பட்டது.கார், ஆம்புலன்ஸ், ஆட்டோ இரு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு ஐந்தரை மீட்டர் அகலத்திற்கும் பாதசாரிகள் நடந்து செல்ல 2 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் ராதாநகர் மெயின் ரோட்டில் இரு புறத்திலும் பாலம் அமைப்பதற்கு தேவையான அளவு இடிக்க 46 கட்டிடங்களையும் காலி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. அங்குள்ள ஒரு பள்ளிக்கு மட்டும் கடந்த மார்ச் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டிட உரிமையாளர்கள் தங்களது இழப்பீட்டு தொகையை நீதிமன்றம் மூலம் பெற்று கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணிகள் துவங்கின. இப்பணிகள் நிறைவு பெற்றதும், இங்கு சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிப்பதற்கு திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம் என துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அந்த பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags : houses ,land ,buildings ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...