×

சின்டெக்ஸ் தொட்டி பராமரிப்பதில் அலட்சியம் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: ஊராட்சி செயலர் மீது மக்கள் அதிருப்தி

திருவள்ளூர், ஜூன் 13: சின்டெக்ஸ் தொட்டி குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதை பராமரிக்காமல் அலட்சியம் காட்டும் கல்லம்பேடு ஊராட்சி செயலர் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லம்பேடு கிராமம். இக்கிராம மக்களின் குடிநீர் தேவையை அங்குள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வந்தது. தற்போது நிலத்தடிநீர்மட்டம் குறைவால் தெரு குழாய்களில் தண்ணீர் வரவில்லை.

இங்குள்ள சர்ச் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, சிறுமின்விசை பம்ப் மூலம் சின்டெக்ஸ் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. அந்த தொட்டியின் குழாய்கள் மூலம் குடிநீரை அப்பகுதி மக்கள் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சின்டெக்ஸ் தொட்டியில் உள்ள மூன்று குழாய்களும் பழுதாகி உள்ளதால், தொட்டியில் உள்ள தண்ணீர் வீணாக வெளியேறி தெருக்களில் ஆறாக ஓடுகிறது.இவ்வாறு தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

அங்குள்ள ஊராட்சி செயலரால், இந்த சிறிய பணியை கூட செய்யமுடியாமல் மெத்தனமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போதிய மழை இல்லாததால் ஆறு, ஏரிகள், குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. எனவே, தற்போது உள்ள நிலையில் வரப்பிரசாதமாக கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதற்கு குழாய்கள் பழுது இல்லாமல் இருக்க வேண்டும். ஆகவே கடம்பத்தூர் ஒன்றிய அதிகாரிகள், கிராமங்களில் உடைந்த குழாய்களை சரி செய்து தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : panchayat secretary ,
× RELATED ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல்...