×

அண்ணாநகரில் போக்குவரத்து விதிமுறையை மீறியதாக 90 ஆயிரம் வாகன ஓட்டிகளுக்கு சம்மன்: 64 நவீன கேமரா மூலம் நடவடிக்கை

சென்னை: அண்ணா நகரில் ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 90 ஆயிரம் வாகன ஓட்டிகளுக்கு சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் வீடுகளுக்கு புகைப்படத்துடன் சம்மன் அனுப்ப போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிமுறைகள் குறித்து பல இடங்களில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதேநேரம் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாத நேரத்தில் சாலையில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், நவீன தொழில்நுட்பம் கொண்ட சிசிடிவி கேமராக்கள் சென்னை போக்குவரத்து காவல் துறையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அண்ணாநகர் பகுதியில் சாந்தி காலனி, அண்ணாநகர் ரவுண்டானா, எஸ்டேட் சாலை, 18வது மெயின் ரோடு, அண்ணாநகர் காவல் நிலையம் சிக்னல் ஆகிய இடங்களில் 64 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த 64 நவீன சிசிடிவி கேமராக்கள் மூலம் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் சாலை விதிகளை மீறியதாக 90 ஆயிரம் வாகனங்களை புகைப்படம் எடுத்துள்ளது.

இதையடுத்து நவீன சிசிடிவி கேமரா பதிவுகளின்படி போக்குவரத்து விதிகளை மீறிய 90 ஆயிரம் வாகனங்களின் உரிமையாளர்களின் வீடுகளுக்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் புகைப்படத்துடன் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் தற்போது நடந்து வருகிறது.
இந்த திட்டத்தை சென்னை முழுவதும் விரிவுப்படுத்தவும் போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த திட்டம் தமிழகத்தில் சென்னை போக்குவரத்து காவல் துறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமராவின் சிறப்பு அம்சம்:
இந்த கேமராவில் உள்ள நவீன தொழில் நுட்பத்தால் சாலைகளில் ஹெல்மட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள், 2 பேருக்கு மேல் பைக்கில் பயணம் செய்தல், சிக்னலை மீறி செல்லும் வாகனம், அதிவேகமாக செல்லும் வாகனம், அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனம் என சாலை விதிகளை மீறி செல்லும் வாகனங்களை அவற்றின் பதிவு எண்களுடன் புகைப்படம் எடுக்கும்.

Tags : Annanagar ,
× RELATED செல்போனில் பேசியபடி சாலையை கடந்த பெண் பைக் மோதி உயிரிழப்பு