×

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து பிரபல துணிக்கடைகளில் திருடிய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது: ரூ.2.5 லட்சம் பட்டுப்புடவை, கார் பறிமுதல்

சென்னை: சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் நேற்று முன்தினம் பட்டுப்புடவைகள் வாங்க 4 பெண்கள் உள்பட 6 பேர் வந்தனர். அப்போது திருமணத்திற்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் மதிப்பில் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை எடுத்து காட்டும்படி கடை ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். உடனே, ஊழியர்கள் 20க்கும் மேற்பட்ட புடவைகளை எடுத்து காட்டி உள்ளனர். பின்னர் டிசைன் பிடிக்கவில்லை என்று 6 பேரும் கடையில் இருந்து புறப்பட்டனர்.

அப்போது அவர்கள் நடந்து செல்வதில் வித்தியாசம் இருந்ததை சிசிடிவி மூலம் பார்த்த கடை மேலாளர் 6 பேரையும் பிடித்து சோதனை செய்தார். அவர்கள், விலை உயர்ந்த 4 பட்டுப்புடவைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் துணிக்கடை மேலாளர் புகார் அளித்தார். போலீசார் வந்து 6 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது டெல்லியை சேர்ந்த ராம்குமார் (40), திம்பு (28), தீபாஞ்சலி (36), பீனா (48), சுனிதா (40), ஜோதி (35) ஆகிய 6 பேரும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட டெல்லியில் இருந்து காரில் வந்து சென்னை லாட்ஜில் அறை எடுத்து தங்கி காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் கூட்டம் அதிகம் உள்ள கடைகளை குறிவைத்து புடவைகளை திருடி வந்தது தெரிய வந்தது.  

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்படி அவர்களது காரில் போலீசார் சோதனை செய்தபோது ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 4 விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் இருந்தது. இந்த பட்டுப்புடவைகள் பனகல் பார்க் அருகே உள்ள பிரபல கடையில் திருடியுள்ளனர். இதையடுத்து 4 பெண்கள் உட்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டெல்லி பதிவு எண் கொண்ட சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : women ,clothes store ,Delhi ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...