×

ஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் நாடி ஜோதிட புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சீர்காழி, ஜூன் 13: பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் நாடி ஜோதிட புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி தையல் நாயகி அம்பாள் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவான் தனி சன்னதி கொண்டு அருள்புரியும் திருக்கோயிலாகும். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அடுத்தப்படியாக மேலும் ஒரு சிறப்பாக அமைவது நாடி ஜோதிடமாகும். பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது. பரம்பரையாக பயிற்சியும், அனுபவமும் பெற்ற பல நாடி ஜோதிடர்கள் இப்பகுதியில் உள்ளனர். ஆனால் தற்போது பெட்டிக் கடைகள், டீக்கடைகளை போல கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் நாடி ஜோதிட அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் நோக்கத்தில் இவைகள் செயல்படுகின்றன. பரம்பரையாக இத்தொழில் ஈடுபட்டு வரும் குறிப்பிடத்தக்க சிலரிடம் நாடி ஜோதிடம் பார்க்க விரும்புபவர்கள் நேரடியாக சென்று விடுகிறார்கள். ஆனால் வருமானத்தை குறிக்கோளாக வைத்து அனுபவமும் பயிற்சியும் இல்லாமல் செயல்பட கூடியவர்களை தேடி வாடிக்கையாளர்கள் வருவது கிடையாது.

 அதனால் நாடி ஜோதிடம் பார்க்க ஆட்களை அழைத்து செல்வதற்காக இப்பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் இத்தகைய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களை வற்புறுத்தி, கட்டாயமாக நாடி ஜோதிடம் பார்க்க அழைத்து செல்கிறார்கள். அதற்காக நாடி ஜோதிடம் பார்க்க ஆட்களை அழைத்து செல்லக்கூடிய புரோக்கர்களுக்கு வரக்கூடிய வருமானத்தில் 40 சதவீதத்தை கமிஷனாக நாடி ஜோதிடர்கள் கொடுத்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு ஒருவர் ரூ.1000 நாடி ஜோதிடம் பார்த்தால் ரூ.400 கமிஷனாக புரோக்கர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அதிக பட்ச கமிஷன் தொகை புரோக்கர்களின் ஆசையை தூண்டி விடுவதால் பக்தர்களை நாடி ஜோதிடம் பார்க்க அழைத்து செல்ல புரோக்கர்கள் எல்லை மீறி செயல்படுகின்றனர். இந்த அடாவடி செயல்பாடுகளால் கோயிலுக்கு பிரார்த்தனைக்காக, பரிகாரத்திற்காக, மன நிம்மதிக்காக வரும் பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். ஆகவே, புற்றீசல்கள் போல வைத்தீஸ்வரன் கோயிலை ஆக்கிரமித்திருக்கும் நாடி ஜோதிட புரோக்கர்களை முறைப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Flower Saints ,pedestrians ,
× RELATED திருவள்ளூர் ஜெ.என்.சாலை நடைபாதை...