போராட்டம் எந்த தேதியில் நடந்தாலும் நிலம்நீர் பாதுகாப்பு இயக்கம் பங்கேற்கும் மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்

மயிலாடுதுறை, ஜூன் 13: மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவிலில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்க மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு விஷ்னுகுமார் தலைமை வகித்தார். தலைவர் இரணியன் முன்னிலை வகித்தார். நந்தகுமார் வரவேற்றார். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மயிலாடுதுறை கோட்டத்தில் வயலில் கெயில் குழாய் பதிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கை உடனே திரும்பபெற வேண்டும், அத்துமீறி செயல்பட்டு வரும் கெயில் நிறுவனம், குழாய் பதிப்பு ஒப்பந்ததாரர் துலாணி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்கு போட்ட செம்பனார்கோவில் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளை அழைத்து கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி, அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து கெயில் திட்டம் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களுக்கு உடனே தடைசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி எம்பிக்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபம் கொடுக்க தமிழக விளைநிலங்களை சுரண்டி அளிப்பதற்காக எரிபொருள் தேவை அவசியம் என பொய்ப் பிரச்சாரம் செய்யும் மத்திய மாநில அரசுகள் செய்யும் சதிசெயலை அம்பலப்படுத்த வரும் ஆகஸ்ட் 31ம் தேதி தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் மயிலாடுதுறையில் மாநாடு நடத்துவது. ஹைட்ரோ கார்பன், கெயில் குழாய் பதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளை ஒரு வல்லுநர்குழுவைக் கொண்டு பொது விசாரணை செய்து பாதிப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிப்பது. மேலும் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த மனித சங்கலி போராட்டம் நீதிமன்ற உத்தரவால் மறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எப்பொழுது மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றாலும் அதில் நிலம்நீர் பாதுகாப்பு இயக்கம் கலந்து கொள்வது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக சுந்தர் நன்றி கூறினார்.

Tags : District Committee Meeting ,participants ,
× RELATED வேளாண் அதிகாரி தகவல் விவசாய...