×

41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க கோரி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை, ஜூன் 13: சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க கோரி தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் நாகை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ராதாராமன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் கணேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன்கள் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறா ஊழியர்களுக்கான தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு வேலை நிதியில் ஊதியம் வழங்குவதை கைவிட்டு அரசின் பொது நிதியில் ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணிநீக்க காலத்தில் மற்றும் பணிக் காலத்திலும் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு 13 ஆண்டு காலமாக பணி வழங்காமல் உள்ளது. எனவே வாரிசுப் பணி வழங்க தடையாக உள்ள விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும். சாலைப் பராமரிப்பு பணியை தனியார் பராமரிக்க வழங்கும் கொள்கை முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருதுநகர், பழனி ஆகிய கோட்டங்களின் மாநில, மாவட்ட நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியார் வசம் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மேற்கண்ட ஒப்பந்தத்தை முன்வைத்து கடந்த 28ம் தேதி நடந்த பேச்சுவர்த்தையின் போது ஒத்துக்கொண்ட ஒப்பந்தங்களை உடனே அரசாணையாக வெளியிட வேண்டும். நெடுஞ்சாலைத் துறையை பராமரிக்க ஐஏஎஸ் படித்தவர்களை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட பொருளாளர் அய்யப்பன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Road employees ,strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து